சாதனை தங்கத்துக்கு குறி வைக்கும் ஆஸ்திரேலிய துப்பாக்கி சுடும் ஜோடி!
லண்டன்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு ஜோடி, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்களத்தை பரபரப்பாக்கியுள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் ஜோடியாக தங்கத்தைத் தட்டிப் பறிக்க இவர்கள் களம் இறங்கியுள்ளதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடும் வீரர் ருஸ்ஸல். இவரது மனைவி லாரன் மார்க். இவரும் துப்பாக்கிச் சுடும் வீராங்கனைதான். இருவரும் இணைந்து லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கத்திற்காக களம் குதித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியில் இதுவரை கணவன், மனைவியாக யாரும் சேர்ந்து தங்கம் வென்றதில்லை. அந்தச் சாதனையை தாங்கள் படைக்கப் போவதாக லாரனும், ருஸ்ஸலும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல இணைந்து ஒரே குரலில் கூறுகின்றனர்.
ருஸ்ஸல் சாமானியப்பட்ட ஆள் இல்லை. 1996ல் அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர் ஆவார்.இவரது மனைவி லாரன் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் 4வது இடத்தைப் பிடித்தார். இம்முறை இருவரும் இணைந்து ஜோடியாக பங்கேற்றுள்ளனர்.
அதி நவீன பிரெட்டா ஷாட் கன்னுடன் இவர்கள் போட்டிக்கு வந்துள்ளனர். இந்த நவீன துப்பாக்கியுடன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளவர்கள் மொத்தமே நான்கு பேர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர் ருஸ்ஸல். இருவரும் ஒலிம்பிக் போட்டிக்காக லண்டன் வ்நது விட்டதால் இவர்களது 6 வயது மகள் சியாரா, 5 வயது மகன் இன்டி ஆகியோரைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு ஆயாவை ஏற்பாடு செய்து விட்டு வந்துள்ளனராம். ருஸ்ஸலுக்கு லாரன் 2வது மனைவிதான். முதல் மனைவி மூலம் 13 வயதில் ஒரு குழந்தையும் ருஸ்ஸலுக்கு உள்ளதாம்.
இன்னொரு சமாச்சாரம் இவர்களைப் பற்றி - கணவன் மனைவியான இவர்களுக்கு கேம்ஸ் வில்லேஜில் ஒரே அறை ஒதுக்கப்படவில்லை. மாறாக தனித் தனியாகத்தான் தங்க வேண்டும் என்று கேம்ஸ் வில்லேஜ் அதிகாரிகள் கூறியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications