லண்டன்: டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் டோணி தலைமையிலான இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டது.
இங்கிலாந்தில் வரும் 5ம் தேதி இரண்டாவது டுவென்டி-20 உலக கோப்பை தொடர் துவங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என 12 அணிகள் இத்தொடரில் விளையாடுகின்றன.
நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கும் இந்திய அணி, வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணியுடன் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. தொடரின் துவக்க போட்டியில் வரும் 5ம் தேதி இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி லீக் சுற்றில் முதல் போட்டியில் வரும் 6ம் தேதி வங்கதேசத்துடனும், இரண்டாவது போட்டியில் 10ம் தேதி அயர்லாந்துடனும் மோதுகிறது.
லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 பிரிவுக்கு முன்னேறும். இதில் சிறப்பாக விளையாடும் நான்கு அணிகள் அரையிறுதிக்கும், அதில் வெற்றிபெறுபவர்கள் வரும் ஜூன் 21ம் தேதி நடக்கும் பைனலில் மோதுவார்கள்.
இந் நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டது.
நெருக்கடி இல்லை-டோணி...
அதற்கு முன்னதாக கேப்டன் டோணி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,
ஐபிஎல் சீசன் 2 தொடரில் இருந்து நாங்கள் நிறைய கற்று கொண்டோம். இத்தொடர் எங்களது பலத்தை அதிகரித்துள்ளது. கடினமான சூழ்நிலைகளில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நன்றாக புரிந்து கொண்டோம். உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் முழு திருப்தியளிக்கிறது.
கடந்த முறை தென் ஆப்ரிக்காவில் கோப்பை வென்றோம். தற்போது நடப்பு சாம்பியனாக களமிறங்குவோம். இம்முறையும் சிறப்பாக விளையாடுவோம். எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றார் டோணி.