பெய்ஜிங்: உலக சாதனை படைத்து 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட். தனது முந்தைய சாதனையை அவரே முறியடித்தார்.
ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீரர்கள் உசேன் போல்ட், அசபா பாவல், அமெரிக்காவின் டெய்ஸன் கெய் இடையே கடுமையான போட்டி நிலவியது.
நடப்பு சாம்பியனான டெய்ஸன், முதலில் நடந்த அரையிறுதியில் 10.05 வினாடிகளில் கடந்து 5வது இடத்தை பிடித்தார். பைனலில் பங்கேற்கும் வாய்ப்பையும் இழந்தார்.
இதையடுத்து ஜமைக்கா வீரர்கள் உசேன் போல்ட், அசபா பாவல் மற்றும் அமெரிக்க வீரர் டிக்ஸ் வால்ட் இடையே விறுவிறுப்பான போட்டி நிலவியது. பைனலில் 8 வீரர்கள் களத்தில் இருந்தனர். உலகின் அதிவேக வீரரை நிர்ணயிக்கும் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
புயல் வேகத்தில் 100 மீட்டரை 9.69 வினாடிகளில் கடந்து உலகின் அதிவீரரானார் உசேன் போல்ட். பட்டத்தோடு தங்கத்தையும் வென்று தனது முந்தைய சாதனையையும் அவரே முறியடித்தார்.
இரண்டாவது இடத்தை டிரினிடாட் டுபாகோவின் தாம்ஸன் ரிச்சர்டும் (9.89), 3வது இடத்தை டிக்ஸ் வால்டர் (9.91) பிடித்தனர். அசபா பாவல் (9.95) ஐந்தாவது இடத்தை பிடித்தார். முதலிரண்டு இடங்களை கரீபிய மண்ணை சேர்ந்தவர்கள் பெற்றதன் மூலம் தடகளத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது.