ஹாமில்டன்: ஹாமில்டன் டெஸ்டில் துவக்க வீரர் குப்டிலை கேட்ச் பிடித்து அவுட்டாக்கிய இந்திய வீரர் டிராவிட், டெஸ்டில் அதிக கேட்ச் பிடித்தவர் என்ற ஆஸ்திரேலியாவின் மார்க் வாக்கின் உலக சாதனையை சமன் செய்தார். கேப்டன் வெட்டோரி பொறுப்பாக விளையாடி சதம் கடக்க, இந்தியாவுடனான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி துவக்கத்தில் ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டது.இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஹாமில்டனில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்றாவது பவுலராக பாலாஜி வருவார் என எதிர்பார்த்த நிலையில் முனாப் களமிறங்கினார்.நியூசிலாந்து துவக்க வீரர்களை ஜாகிர், இஷாந்த் கூட்டணி மிரட்டியது. குப்டில் 12 ரன்கள் எடுத்தநிலையில் ஜாகிர் பந்தில் டிராவிட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இது டிராவிட் பிடிக்கும் 181வது கேட்சாகும். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக்கின் சாதனையை டிராவிட் சமன் செய்தார்.அடுத்து வந்த பிளைன் டக் அவுட்டானார். மெஷின்டோஷ் (12), ரோஸ் டெய்லரை (18), பிராங்ளின் (0) ஆகியோர் இஷாந்த் சர்மா பந்தில் வரிசையாக பெவிலியன் திரும்பினர். ஒரு நாள் தொடரில் மிரட்டிய மெக்கலத்தை (3) முனாப் அவுட்டாக்கினார். இதையடுத்து நியூசிலாந்து வெறும் 60 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது.வெட்டோரி சதம்...இந்நிலையில் களமிறங்கிய கேப்டன் வெட்டோரி, ரைடருடன் இணைந்து அணியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அதிரடியாக விளையாடிய வெட்டோரி அரைசதம் கடந்தார். மறுமுனையில் ரைடரும் 50 ரன்களை தொட்டார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெட்டோரி சதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். இவர் 2 சிக்சர், 14 பவுண்டரிகள் உட்பட 118 ரன்கள் எடுத்து முனாப் பந்தில் அவுட்டானார்.நியூசிலாந்து முதல் நாள் தேநீர் இடைவேளைக்கு பின்னர் 72 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. #13;