இன்று பாக்ஸிங் காலிறுதி: விஜேந்தர், ஜிதேந்தர் போட்டிக்கு ரெடி

இந்தியாவின் பதக்க நம்பிக்கையை குத்துச் சண்டை வீரர்கள் அதிகப்படுத்தியுள்ளனர். இதுவரை இல்லாத அளவு 3 குத்துச் சண்டை வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறினர். அவர்களில் அகில் குமார் நேற்று முன்தினம் நடந்த போட்டியில்எதிர்பாராதவிதமாக தோல்வியுற்றார்.
இந்த நிலையில் மற்ற இரு வீரர்களான ஜிதேந்தர் குமார் மற்றும் விஜேந்தர் குமார் ஆகியோர் இன்றைய காலிறுதிப் போட்டிகளில் களம் காண்கின்றனர்.
விஜேந்தர் ஈகுவடார் வீரர் கார்லோஸ் காங்கோராவை 75 கிலோ எடைப் பிரிவில் சந்திக்கிறார். ஜிதேந்தர் 51 கிலோ எடைப் பிரிவில் ரஷ்ய வீரர் ஜியார்ஜி பாலஷின்னை சந்திக்கிறார்.
இந்தப் போட்டிகள் குறித்து இந்திய பயிற்சியாளர் சந்து கூறுகையில், அகில் குமார் போட்டி குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் மற்ற இரு போட்டிகளிலும் நமது வீரர்கள் பதக்கம் வெல்வார்கள் என்று மட்டும் கூற விரும்புகிறேன்.
ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டி என்பது வித்தியாசமானது. விஜேந்தர் நம்பிக்கையுடன் உள்ளார். அதேபோல ஜிதேந்தரும் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார்.
அகில் தோல்வியால் ஜிதேந்தர் சற்று அப்செட் ஆகியிருந்தார். ஆனால் தற்போது அதிலிருந்து மீண்டு விட்டார். ரஷ்ய வீரரை எதிர்கொள்ள அவர் தயாராக உள்ளார் என்றார்.
இரு குத்துச்சண்டை வீரர்களும் இன்று மாலை நடைபெறும் போட்டிகளில் மோதவுள்ளனர். முதல் போட்டியில், ஜிதேந்தர் குமார், ரஷ்ய வீரரை மாலை 4.45 மணிக்கு சந்திக்கிறார். விஜேந்தர் கலந்து கொள்ளும் போட்டி மாலை 6.15 மணிக்கு நடைபெறுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
