பெய்ஜிங்: மோனிகா தேவியை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என சர்வதேச பளு தூக்கும் சங்கம் கை விரித்து விட்டதாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் மோனிகா தேவியை எப்படியாவது பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்பதற்காக கடுமையாக முயற்சித்தது. இருப்பினும் சர்வதேச பளு தூக்கும் சங்கம் எங்களது கோரிக்கையை ஏற்று மோனிகாவை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்க மறுத்து விட்டது.
மிகக் கடுமையாக முயற்சித்தும் கூட மோனிகாதேவியால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ஏற்கனவே போட்டிகள் ஆரம்பித்து விட்டதால், இதில் ஒன்றும் செய்ய முடியாது என போட்டி அமைப்பாளர்கள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச பளு தூக்கும் சங்கம் ஆகியவை கை விரித்து விட்டன.
மோனிகாவை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்ற தகவலை சர்வதேச பளு தூக்கும் சங்கத்தின் தலைவர் தமஸ் அஜன், இந்திய பளு தூக்கும் சங்கத் தலைவர் பி.ஆர்.குலாத்திக்கு அனுப்பியுள்ளார் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் மோனிகா தேவி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.