மதுரை: விளையாட்டுக்கு என தனி கொள்கையை அனைத்து மாநிலங்களும் உருவாக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து மாநில வீரர்களும் சாதிக்க முடியும் என்று ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில்குமார் தெரிவித்தார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர் சுஷில்குமாருக்கு மதுரை வேலம்மாள் கல்வி நிறுவனத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
அப்போது அவர் பேசுகையில், பதக்கம் பெறுவதற்கு ஆர்வம் மட்டும் போதாது கடுமையான பயிற்சியும் தேவை. சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எதிர்காலத்தில் இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாடுவேன்.
நான் சுத்த சைவம். இதனால் வெளிநாடுகளுக்கு செல்லும்போது உணவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
விளையாட்டு வீரனுக்கு சுய ஆர்வமும் பயிற்சியும் இருந்தால் சாதிக்கலாம். இந்திய மக்களின் ஆசீர்வாதத்தால்தான் என்னால் சாதிக்க முடிந்தது.
அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பதக்கம் பெறுகின்றனர் என்ற எண்ணம் தவறானது. ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற பி.டி.உஷா கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.
மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடினர். ஆனால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் இருந்திருக்கலாம். யாராக இருந்தாலும் பயிற்சிதான் முக்கியம்.
டில்லி, அரியானா மாநிலங்களில் தனி விளையாட்டு கொள்கைகளை மாநில அரசுகள் வகுத்துள்ளன. மற்ற மாநிலங்களில் இந்த கொள்கைகளை பின்பற்ற வேண்டும். அப்போது தான் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற முடியும்.
எனக்கு, சிறு வயது முதலே கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் இருந்ததால் தான் மல்யுத்திற்கு வர முடிந்தது. மல்யுத்த வீரர் ஆகும் முன் இந்த விளையாட்டுகளிலும் பயிற்சி பெறுவது முக்கியம்.
அரசு அனுமதித்தால் அபினவ் பிந்த்ரா போல சிறப்பு பள்ளிகளை நடத்தலாம். பளு தூக்குவதில் தமிழக வீரர்கள் சிறப்பானவர்கள். ஒலிம்பிக்கில் சாதனை படைக்க பயிற்சியும் உத்வேகமும் தேவை என்றார் சுஷில் குமார்.