மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் சபினாவை வீழ்த்தி கோப்பை வென்றார். இது அவர் கைப்பற்றும் 10வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடக்கிறது. இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் டினரா சபினாவை எதிர்கொண்டார்.
இதில் சூப்பராக செயல்பட்ட செரினா 6-0, 6-3 என்ற செட்களில் மிக மிக எளிதாக வென்றார். அவரது அதிரடிக்கு முன்னர், சபீனா திணறிப் போய் விட்டார்.
இது செரீனா வெல்லும் 4வது ஆஸ்திரேலியன் ஓபன் மற்றும் 10வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
யுகி பம்பிரி சாம்பியன்...
முன்னதாக நடந்த ஜூனியர் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், இந்தியாவின் யுகி பம்பிரி, ஜெர்மனியின் அலக்சாண்ட்ரோஸ் பெர்ணான்ட்ரோசை எதிர்கொண்டார்.
அதில் சிறப்பாக விளையாடிய பம்பிரி முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். அடுத்த செட்டிலும் சூப்பராக செயல்பட்ட அவர் அதை 6-1 என வென்றார். முடிவில் 6-3, 6-1 செட்களில் வீழ்த்தி, பட்டம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய டென்னிஸ் வரலாற்றில் சாதனை படைத்த முன்னணி வீரர்கள் வரிசையில் யுகி இணைந்துள்ளார்.
இதற்கு முன்பு 1954ம் ஆண்டு ராமநாதன் கிருஷ்ணன் விம்பிள்டன் ஜூனியர் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார்.
1979ம் ஆண்டு ரமேஷ் கிருஷ்ணன், விம்பிள்டன் மற்றும் பிரெஞ்சு ஓபன் ஜூனியர் பட்டங்களை வென்றுள்ளார்.
லியாண்டர் பயஸ், 1990ம் ஆண்டு விம்பிள்டன் ஜூனியர் பட்டத்தையும், 91ம் ஆண்டு அமெரிக்க ஓபன் ஜூனியர் பட்டத்தையும் வென்றார்.
2003ம் ஆண்டு சானியா மிர்ஸா, விம்பிள்டன் ஜூனியர் இரட்டையர் பட்டத்தை வென்றுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த பம்பிரி ஜூனியர் வீரர்களுக்கான தர வரிசையில் 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.