பாரிஸ் : ஒலிம்பிக் வரலாற்றைப் பற்றி எழுதினால் பிரிட்டன் தடகள வீரர் முஹம்மத் ஃபராவின் சாகசத்தை பற்றி எழுதாமல் நிச்சயம் இருக்க முடியாது. நமக்கு எவ்வளவு பெரிய தடை வந்தாலும் அதனை தகர்த்து எறிந்து வெற்றியை நோக்கி எப்படியாவது செல்ல வேண்டும் என்பதுதான் முகமது ஃபராவின் தாரக மந்திரம்.
சோமாலியாவில் பிறந்து வறுமையில் வாடி பிரிட்டன் வந்த முகமது ஃபரா தன்னுடைய திறமையின் மூலம் தடகள விளையாட்டின் மிகச் சிறந்த வீரர்களின் ஒருவராக திகழ்ந்தார். அதாவது 100 மீட்டர், 200 மீட்டர் போட்டிகளில் யார் வேண்டுமானாலும் ஓடிவிடலாம்.

ஆனால் ஐந்து ஆயிரம் மீட்டர், பத்தாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன் ஆகவது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால் முஹம்மது ஃபரா இரண்டு முறை தொடர்ந்து ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். முஹம்மது ஃபரா இதுவரை நான்கு ஒலிம்பிக் பதக்கமும் , உலக சாம்பியன் பட்டம் ஆறுமுறையும் வென்று அசத்தியிருக்கிறார்.
சோமாலியாவில் நடந்த இனப்படுகொலையில் இவருடைய தந்தையை இழந்தார். அதன் பிறகு மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்த தாய் சட்டவிரோதமாக ஒரு பெண்ணுடன் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அந்த வகையில் தன்னுடைய ஒன்பதாவது வயதில் பிரிட்டனுக்கு வந்த முகமது ஃபரா அங்கு வீட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
ஜூலை 2000 ஆண்டு பிரிட்டன் குடியுரிமை பெற்ற முஹம்மது ஃபராவின் திறமையை கல்லூரி பி டி ஆசிரியர் தான் கண்டுபிடித்தார். அதன் பிறகு பராவை விளையாட்டு வீரர்களுக்கான கிளப்பில் இணைத்து அங்கு அவருக்கு பயிற்சி அளிக்க உதவினார். வாழ்க்கையின் அடித்தளத்தில் இருந்த தமக்கு வெற்றி பெற வேண்டுமென்றால் விளையாட்டு மட்டும் தான் இருக்கிறது என்பதை உணர்ந்த ஃபரா வெறித்தனமாக உழைக்க தொடங்கினார்.
அதிலிருந்து ஃபரா தொடர்ந்து ஏறுமுகத்தையே கண்டார். 2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் சென்ற ஃபரா அதன்பிறகு தொடர்ந்து உழைத்தார். 2009 ஆம் ஆண்டு ஐரோப்பிய அளவிலான உள்ளரங்கு சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம், 2011 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம், 2013 ஆம் ஆண்டு மீண்டும் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் என்று பட்டையை கிளப்பிய முகமது ஃபரா.
லண்டன் ஒலிம்பிக்கில் 2012 ஆம் ஆண்டு யாரும் தொட முடியாத ஒரு சாதனையை படைத்தார். பத்தாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முகமது ஃபரா 27 நிமிடம் 30.42 வினாடிகளில் கடந்து தங்கத்தை வென்றார். பத்தாயிரம் மீட்டர் பிரிவில் பிரிட்டன் வென்ற முதல் தங்கம் இதுவாகும். இதேபோன்று ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 13 நிமிடம் 41 வினாடிகளில் கடந்து மீண்டும் தங்கம் வென்றார். முஹம்மது ஃபராவின் சாகசத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் 2016 ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தன்னுடைய தங்கத்தை பத்தாயிரம் மீட்டர் பிரிவில் ஃபரா தக்க வைத்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்த போது, அப்போது இறுதி போட்டியில் பத்தாவது சுற்றின் போது அமெரிக்க வீரர் கேலன் ரூப் உடன் மோதி ஃபரா கீழே விழுந்தார். இதன் மூலம் முஹம்மது ஃபராவின் வெற்றி பறிபோகப் போகிறது என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் வாழ்க்கை முழுவதுமே பல தடைகளை தாண்டி ஓடோடி பழகிய ஃபராவுக்கு இது பெரிய தடையாகவே தெரியவில்லை.
கீழே விழுந்தாலும் அதை ஒரு காரணமாக சொல்லக்கூடாது என நினைத்த ஃபரா எப்படியாவது தங்கத்தை வென்று விட வேண்டும் என நினைத்து மீண்டும் சீறி பாய்ந்து ஓடினார். 27 நிமிடம் 5.17 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முகமது பாரா தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். கீழே விழுந்த பிறகு ஒருவர் தங்கம் வெல்வது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.
இதேபோன்று 5000 மீட்டர் ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் முகமது ஃபரா இரண்டாவது தங்கம் வென்றார். இதன்பிறகு அடிக்கடி காயம் ஏற்பட்ட ஃபரா 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டது. புலம் பெயர்ந்தவர்களை குற்றவாளியாகவே பார்க்கும் இந்த உலகில், தன் உழைப்பின் மூலம் ஹீரோவாக மாறி, அனைவரின் கண்ணோட்டத்தையும் மாற்றினார் ஃபரா.