டெல்லி: இந்திய விளையாட்டு உலகையே உலுக்கிய இளம் மல்யுத்த வீரர் சாகர் தன்கர் கொலை வழக்கில், ஒலிம்பிக் பதக்க நாயகன் சுஷில் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரு வாரத்திற்குள் சரணடைய வேண்டும் என்றும் அவருக்குக் கெடு விதித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி, டெல்லியில் உள்ள சாத்ராசால் மைதானத்தில் நடந்த மோதலில், 27 வயதான மல்யுத்த வீரர் சாகர் தன்கர் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது டெல்லி காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்தது.

சாகர் தன்கரைத் தாக்குவதற்காக டெல்லி மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த தனது கூட்டாளிகளுடன் சுஷில் குமார் சதித்திட்டம் தீட்டியதாக காவல்துறை குற்றம் சாட்டியது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றில் சுஷில் குமார் இடம்பெற்றிருந்தது, இந்த வழக்கில் அவருக்கு எதிரான முக்கிய ஆதாரமாக அமைந்தது. தலைமறைவாக இருந்த சுஷில் குமார், லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட பிறகு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், சுஷில் குமார் மற்றும் மேலும் 17 பேர் மீது கொலை, கொலை முயற்சி, சட்டவிரோதமாகக் கூடுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரம் செய்தல் மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் செஷன்ஸ் நீதிமன்றம் அக்டோபர் 2022-ல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. சாட்சிகளின் வாக்குமூலங்கள், மருத்துவ ஆதாரங்கள் மற்றும் குற்றப்பத்திரிகையில் உள்ள பிற சான்றுகளின் அடிப்படையில் கொலை மற்றும் கொலை முயற்சிக்கான வலுவான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இதனிடையே, தனக்கு ஜாமீன் கோரி சுஷில் குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தமுள்ள 186 அரசுத் தரப்பு சாட்சிகளில் வெறும் 30 பேர் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, டெல்லி உயர் நீதிமன்றம் மார்ச் 4, 2025 அன்று சுஷில் குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, கொல்லப்பட்ட சாகர் தன்கரின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் பி.கே. மிஸ்ரா அடங்கிய அமர்வு, சுஷில் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து புதன்கிழமை உத்தரவிட்டது.
இந்த உத்தரவு, சாகர் தன்கர் கொலை வழக்கில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பெருமையாகக் கருதப்பட்ட ஒரு விளையாட்டு வீரர், கொலை வழக்கில் சிக்கி, அவரது ஜாமீன் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருப்பது விளையாட்டு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.