தமிழகத்தின் புதிய செஸ் நாயகன்.. 9 வயதில் உலக தரவரிசையில் முதலிடம் பிடித்து தமிழ் அமுதன் சாதனை!
சென்னை: செஸ் விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தமிழ் அமுதன் மாபெரும் உலக சாதனை படைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். 9 வயதுக்குட்பட்டோருக்கான உலக செஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள அவர், இந்த வயதில் 2000 எலோ ரேட்டிங் புள்ளிகளைக் கடந்த மிக இளவயது வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி முதல் உலக மேடை வரை
தனது 4 வயதில் செஸ் விளையாடத் தொடங்கிய தமிழ் அமுதன், குறுகிய காலத்திலேயே அபாரத் திறமையை வெளிப்படுத்தினார். மாவட்ட அளவிலான போட்டியில் இவரது விளையாட்டைப் பார்த்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநரும், பகுதிநேர செஸ் பயிற்சியாளருமான ரவிச்சந்திரன், இவருக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். இதன் பலனாக, தனது 6 வயதிலேயே மாநில அளவிலான போட்டியில் 9க்கு 9 புள்ளிகள் பெற்று அசத்தினார். கடந்த ஆண்டு நடைபெற்ற செஸ் தொடர் ஒன்றில் வெள்ளிப் பதக்கம் வென்று பரிசாக ஒரு காரையும் வென்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

குடும்பத்தின் தியாகம்
தமிழ் அமுதனின் இந்த வளர்ச்சிக்குப் பின்னால் அவரது குடும்பத்தினரின் மிகப் பெரிய தியாகம் உள்ளது. விவசாயப் பின்னணியைக் கொண்ட அரசு ஊழியரான இவரது தந்தை, மகனின் பயிற்சிக்காகப் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார். தடையற்ற பயிற்சிக்காக, தமிழ் அமுதனின் தாய் அவருடன் 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறொரு நகரத்தில் தங்கியுள்ளார். தந்தை தனது 10 வயது மகளுடன் சொந்த ஊரில் தங்கி குடும்பத்தைக் கவனித்து வருகிறார்.
ஸ்பான்சர் கிடைக்குமா?
செஸ் விளையாட்டு அதிக செலவு பிடிக்கும் ஒரு விளையாட்டாகும். போட்டி நடைபெறும் இடங்களுக்குச் செல்வதற்கான பயணம், தங்கும் செலவு, நுழைவுக்கட்டணம் மற்றும் பயிற்சிக்கான செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தமிழ் அமுதனின் தந்தை தற்போது தவித்து வருகிறார். போதிய நிதி வசதி இல்லாத காரணத்தால் பல முக்கியமான தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.
இந்த சிரமங்களுக்கு இடையேயும் அவர் 2000 எலோ ரேட்டிங் புள்ளிகளைக் கடந்த மிக இளவயது வீரர் என்ற புதிய சாதனையை எட்டியுள்ளார். இந்த சாதனையை அடுத்து முன்னணி செஸ் வீரர்கள் மற்றும் விளையாட்டு சார்ந்த நிறுவனங்கள் அவருக்கு ஸ்பான்சர் செய்ய முன்வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications