தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் விஷால் மனம் திறந்த பேட்டி - Mykhel Exclusive
சென்னை: தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அங்குள்ள பிரம்மாண்ட ரயில்வே சந்திப்பு தான். ஆனால், இனி ஜோலார்பேட்டைக்கு மற்றொரு அடையாளமும் உண்டு. அது, இந்திய தடகள வரலாற்றில் யாரும் எட்டாத மைல்கல்லை எட்டிய தமிழக வீரர் விஷால் டிகே. ராஞ்சியில் சமீபத்தில் நடைபெற்ற 2026 பெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 44.98 விநாடிகளில் இலக்கை எட்டி, 45 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் இலக்கை கடந்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை விஷால் படைத்துள்ளார்.
தன்னுடைய இந்த வெற்றிப் பயணம் மற்றும் ஜோலார்பேட்டை டூ ராஞ்சி வரை அவர் கடந்து வந்த பாதை குறித்து விஷால் டிகே நமது மைகேல் (Mykhel) தளத்திற்கு அளித்த விரிவான பேட்டி இதோ:
ராஞ்சியில் அரங்கேறிய அதிசயம்:
"ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மைதானத்தில் 44.98 விநாடிகளில் நான் ஓடி முடித்தபோது, அது ஒரு மேஜிக் இரவாகத் தெரிந்தது. கடந்த ஆண்டு நான் படைத்த 45.12 விநாடிகள் என்ற தேசிய சாதனையை நானே முறியடித்துள்ளேன். 45 விநாடி என்ற தடையை உடைப்பது இந்திய தடகளத்தில் பல ஆண்டு கால கனவு. ஜாம்பவான் மில்கா சிங் காலத்திலிருந்து, 1998-ல் பரம்ஜித் சிங் படைத்த 45.70 விநாடி சாதனை வரை அனைத்தும் 45 விநாடிகளுக்கு மேலேயே இருந்தன. அதை 0.72 விநாடிகள் குறைத்து புதிய சகாப்தத்தைப் படைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது."
ஜோலார்பேட்டை சிறுவன்:
"ஜோலார்பேட்டையில் பெரிய பஸ் ஸ்டாண்ட் கூட கிடையாது, ரயில் நிலையம் தான் பிரபலம். அங்கிருந்து வந்தவன் என்று சொல்வதில் எனக்குப் பெருமை. என் தந்தை உள்ளூர் மைதானத்திற்கு விளையாடச் செல்லும்போது, நானும் அவரோடு செல்வேன். ஜோலார்பேட்டை மினி ஸ்டேடியத்தில் ஓடும் வீரர்களைப் பார்த்து தான் எனக்கு ஆர்வம் வந்தது. பின்னர் 6-ம் வகுப்பு படிக்கும்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) விடுதிக்குத் தேர்வானது என் வாழ்வின் மிகப்பெரிய திருப்பம்."

நடுத்தர தூரம் டூ ஸ்பிரிண்ட்:
"ஆரம்பத்தில் நான் 400 மீட்டர் வீரர் கிடையாது. 600 மீட்டர் மற்றும் 800 மீட்டர் பந்தயங்களில் தான் ஓடினேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் 400 மீட்டருக்கு மாறினேன். அந்த நடுத்தர தூர ஓட்டப் பயிற்சி தான், இப்போது 400 மீட்டர் ஓட்டத்தின் கடைசி 100 மீட்டரில் நான் மின்னல் வேகத்தில் ஓட பலம் தருகிறது."
உசேன் போல்ட் உத்வேகம்:
"ஸ்பிரிண்ட் வீரர்களுக்கு உசேன் போல்ட் தான் கடவுள். அவர் வெறும் வெற்றி பெறுவதற்காக ஓடுவதில்லை, அந்தப் போட்டியைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர ஓடுவார். அதுவே என் மனநிலை. கண்ணாடி முன் நின்று, 'நானே முதலிடம், இதற்காகத்தான் நான் பயிற்சி எடுத்தேன்' என்று அடிக்கடி சொல்லிப் பார்ப்பேன். இந்த தன்னம்பிக்கை தான் ராஞ்சியில் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்த வைத்தது."
ஜேசன் டாசன் எனும் சிற்பி:
"என்னைச் செதுக்கியவர் என் ஜமைக்கா பயிற்சியாளர் ஜேசன் டாசன். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னை ஒரு சாம்பியனாக மாற்றினார். அவர் போடும் திட்டங்களை நான் கேள்வி கேட்காமல் அப்படியே பின்பற்றுவேன். அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை உண்டு."
கும்மி அளித்த காயம்... அதுவே பாடம்!
"கடந்த ஆண்டு தென்கொரியாவின் கும்மி நகரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், வெறும் 0.02 விநாடி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டு 4-வது இடத்தைப் பிடித்தேன். அது என்னை மிகவும் பாதித்தது. ஆனால், அந்தத் தோல்வி தான் 45 விநாடித் தடையை உடைக்க வேண்டும் என்ற வெறியை எனக்குள் ஏற்படுத்தியது. இப்போது ராஞ்சியிலும் காமன்வெல்த் போட்டித் தகுதிக்கு வெறும் 0.02 விநாடி வித்தியாசத்தில் தவறியுள்ளேன். ஆனால், இப்போது வருத்தம் இல்லை, பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டேன் என்ற திருப்தி இருக்கிறது."
தமிழக அரசின் ஆதரவு:
"தமிழக அரசு எனக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு தருகிறது. விளையாட்டுத் திட்டங்கள், வேலைவாய்ப்பு, பயண உதவி என அனைத்தையும் செய்து தருகிறார்கள். SDAT, JSW, இந்திய தடகள சம்மேளனம் (AFI) மற்றும் பிபிசிஎல் நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. இந்திய தடகளத்தில் ஒரு சிறந்த கட்டமைப்பைத் தமிழக அரசு உருவாக்கி வருகிறது."
கடல் போன்ற லட்சியம்:
"தடகளம் என்பது ஒரு குளம் கிடையாது, அது ஒரு கடல். அந்தக் கடலில் ஒரு சிறிய தங்க மீனாக இருக்க நான் விரும்பவில்லை. ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க விரும்புகிறேன். 45 விநாடி தடையை உடைத்தது ஒரு ஆரம்பம் தான். என் பயணம் இப்போது தான் தொடங்கியுள்ளது. ஜோலார்பேட்டையை உலக தடகள வரைபடத்தில் உச்சத்தில் அமர வைப்பதே என் லட்சியம்" என உத்வேகத்துடன் முடித்தார் விஷால்.


Click it and Unblock the Notifications
