டெல்லியிடம் தமிழகம் சரண்டர்!
அகமதாபாத்: தலைப்பை பார்த்தவுடன் இது ஏதோ அரசியல் செய்தி என்று நினைக்க வேண்டாம். புரோ கபடி லீக் சீசன் 5ல் நடந்த போட்டியில், வெற்றியை கிட்டத்தட்ட நெருங்கிய நிலையில், 29-30 என்ற புள்ளிக் கணக்கில் டில்லியில், தமிழக அணி தோல்வியடைந்தது.
புரோ கபடி லீக், 5வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. மொத்தமுள்ள, 12 அணிகள் இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.

13 வாரங்களுக்கு நடக்கும் இந்த போட்டிகளில், தற்போது மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் நடந்து வருகின்றன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில், பி மண்டலத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் அணியும், ஏ மண்டலத்தில் உள்ள தபாங்க் டில்லி அணியும் மோதின.
துவக்கத்தில் இருந்தே இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடி, மாறி மாறி புள்ளிகளை எடுத்தன. முதல் பாதி இறுதியில், 12-12 என, சமநிலையில் இருந்தன.
இரண்டாவது பாதி துவங்கியதும், முந்தைய போட்டியில் சொதப்பிய தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்கூர், தான் யார் என்பதை காட்டினார். தொடர்ந்து புள்ளிகளைப் பெற்று, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஒரு நிலையில், டில்லி ஆல்அவுட் ஆனது. அப்போது தமிழ் தலைவாஸ் 25-22 என்று முன்னிலையில் இருந்தது. போட்டி முடிவடைய சில நிமிடங்களே இருக்கும்போது, டில்லியின் ராஜ்ஜியம் துவங்கியது. 28-27 என்று முன்னிலை பெற்றது. கடைசியில் டில்லி 30-29 என்ற கணக்கில் வென்றது.
இந்த போட்டியை அடுத்து, 5 ஆட்டங்களில், ஒரு வெற்றி, 3 தோல்வி, ஒரு டையுடன், தமிழ் தலைவாஸ், 11 புள்ளிகளுடன் உள்ளது.
டில்லி அணி, 6 போட்டிகளில், 2 வெற்றி, 4 தோல்விகளுடன், 13 புள்ளிகளைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications