தமிழக தடகள வீரர் லட்சுமணன் கோவிந்தன் 3வதாக வந்தும் வெண்கலம் இழந்த பரிதாபம்.. காரணம் இதுதான்
ஜகார்த்தா : நேற்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் எட்டாம் நாள், தடகளப் போட்டிகள் நடைபெற்றன. அதில் ஆடவர் 10000 மீட்டர் ஓட்டத்தில், தமிழக வீரர் லட்சுமணன் 29:44.91 நிமிடங்களில் எல்லையை தொட்டு மூன்றாவதாக வந்து வெண்கலம் வென்றார் என அறிவிக்கப்பட்டது. எனினும், அடுத்த சில நிமிடங்களில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், இந்தியாவிற்கு ஒரு பதக்கம் கிடைத்தும் பறிபோய் உள்ளது. இந்த சம்பவம் நடந்த சிறிது நேரம் இந்திய முகாமில் குழப்பம் நிலவியது. பின், போட்டி நடுவர்கள் லட்சுமணன் ஓடும் போது தன் காலை ஒருமுறை ஓடுபாதையின் எல்லைக் கோட்டுக்கு அப்பால் வைத்துள்ளார். அதனால், விதிப்படி அவர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என அறிவித்தனர். நடுவர்கள் போட்டியின் காணொளிக் காட்சிகளை பார்த்து இந்த தவறை உறுதி செய்துள்ளனர்.

அந்த காணொளிக் காட்சியில் அவர் தனக்கு முன்னே செல்லும் வீரர் அருகில் ஓடுபாதையின் எல்லைக்கருகே ஓடிய போது தவறுதலாக ஒரு காலை எல்லைக்கோட்டுக்கு அப்பால் வைத்துவிட்டார் என்பது தெரிந்தது.
தடகள விதியான IAAF 163.3b என்ற விதியின்படி லட்சுமணன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனினும், இந்தியா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டை நடுவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இது நேற்று இந்தியாவிற்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
தடகள வீரர் லட்சுமணன் 2017 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நேற்று அவருக்கு அதிர்ஷ்டமில்லை. ஒரு சிறிய தவறால் பதக்கத்தை இழந்தார்.


Click it and Unblock the Notifications