இந்தோனேசியாவில் தமிழ்நாட்டின் தங்கவேலு மாரியப்பனுக்கு கிடைத்த பெருமை!!
Recommended Video

டெல்லி : இந்தோனேசியாவில் நடைபெற உள்ள 3வது ஆசிய பாராலிம்பிக் (மாற்றுத்திறனாளர்) விளையாட்டுப் போட்டிகளில் இந்திய தேசிய கொடியை ஏந்தும் பெருமையை தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பன் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளர் தடகள வீரரான தங்கவேலு மாரியப்பன் இதற்கு முன் பாராலிம்பிக் போட்டிகளில் பல சாதனைகள் புரிந்துள்ளார்.
2016 ரியோ பாராலிம்பிக் விளையாட்டுத் தொடரில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழர், நம் தங்கவேலு மாரியப்பன். அவரது சாதனைகளை பெருமைப்படுத்தும் வகையில் 2017ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது மற்றும் அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு இவரை கௌரவித்துள்ளது. தமிழக அரசும் இவருக்கு பணப் பரிசு வழங்கி இருக்கிறது.

ஆசிய பாராலிம்பிக் போட்டிகள்
இந்த முறை இந்தோனேசியாவில் வரும் அக்டோபர் 6 முதல் 13 வரை நடைபெற உள்ள ஆசிய பாராலிம்பிக் போட்டியில் நம் தங்கவேலு மாரியப்பன் உட்பட ஏராளமான இந்திய மாற்றுத்திறனாளர் தடகள வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

தேசிய கொடி வாய்ப்பு
இவர்களில், ரியோவில் தங்கம் வென்று சாதித்த தங்கவேலு மாரியப்பனுக்கு இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்லும் பெருமை கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் ஒலிம்பிக், காமன்வெல்த் அல்லது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு கொடி ஏந்திச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில், தங்கவேலு மாரியப்பன் இந்த வாய்ப்பை பெற்றார்.

அனுமதி இல்லை
இந்த இந்தோனேசிய ஆசிய பாராலிம்பிக் தொடருக்கு இந்திய வீரர்கள் இந்தோனேசியா சென்றனர். அங்கே போட்டிகளை நடத்தும் நிர்வாகிகள் தங்கும் அறைகள் இருக்கும் விளையாட்டு கிராமத்தின் உள்ளே இந்திய வீரர்களை அனுமதிக்கவில்லை. இதனால், சிறிது குழப்பம் ஏற்பட்டது.

அலட்சியத்தால் குழப்பம்
குழப்பத்திற்கு காரணம், வழக்கம் போல விளையாட்டு அமைச்சகத்தின் அலட்சியம் தான் என பிறகு தெரிய வந்தது. இந்திய விளையாட்டு அமைச்சகம் சுமார் 2.5 லட்சம் டாலர் பாக்கி பணத்தை, போட்டிகளை நடத்தும் நிர்வாகத்திடம் செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. பணத்தை செலுத்திய பின்னர், இந்திய வீரர்கள் மற்றும் குழுவினர் தங்கும் அறைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.


Click it and Unblock the Notifications