பாரா ஆசிய போட்டிகள்.. வெள்ளி வென்ற தமிழ்நாடு வீரர்.. உயரம் தாண்டுதலில் அசத்திய மாரியப்பன்!
ஹாங்சோ: 2023ஆம் ஆண்டுக்கான பாரா ஆசிய போட்டிகள் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
அண்மையில் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனை புதிய வரலாறு படைத்தனர். 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என்று 107 பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் ஆசிய போட்டிகளில் முதல்முறையாக 100 பதக்கங்களுக்கு மேல் வென்று இந்தியா புதிய சாதனை படைத்தது.

இதன் மூலம் இந்தியாவில் கிரிக்கெட் மட்டுமல்லாமல் ஏனைய விளையாட்டுகள் இளைஞர்களால் விளையாடப்படுவதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிய போட்டிகள் நடைபெற்ற சீனாவில் ஹாங்சோ நகரில் தற்போது பாரா ஆசிய போட்டிகள் தொடங்கியுள்ளது. நேற்று தொடங்கிய இந்த போட்டிகள், வரும் 28ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதில் இந்தியா சார்பாக 17 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 191 ஆண்கள் மற்றும் 112 பெண்கள் என்று 303 வீரர்கள் அடங்கிய இந்திய குழு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர்கள் 3 பதக்கங்களையும் வென்று அசத்தியுள்ளனர். இந்தியாவின் சைலேஷ் குமார் 1.82 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அதேபோல் 1.80 மீட்டர் உயரம் தாண்டிய தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கத்தையும் வென்றார். தொடர்ந்து வெண்கலப் பதக்கத்தை இந்தியாவின் ராம் சிங் கைப்பற்றினார். 2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார். அதன்பின் 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications