இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் சாப்பாட்டில் ஊக்க மருந்து கலக்கப்பட்டது அம்பலம்.. வாலிபர் சிக்கினார்
டெல்லி: ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவிருந்த இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் சாப்பாட்டில் அவருக்கே தெரியாமல் ஊக்க மருந்து கலக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. ஊக்க மருந்தை கலக்கிய டீன் ஏஜ் வாலிபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றிருந்த நர்சிங் யாதவ், ஊக்க மருந்து சாப்பிட்டதாக ரத்த பரிசோதனை அறிக்கை காட்டியது.
இதையடுத்து அவர் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதித்த மல்யுத்த கூட்டமைப்பை, அவருக்கு பதிலாக பிரவீண் ராணா என்ற மல்யுத்த வீரரை ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதித்துள்ளது.

போலீசில் புகார்
இந்நிலையில் நர்சிங் தனது மீதான புகாரை மறுத்து வருகிறார். இதில் சதி நடந்திருப்பதாக அவர் கூறினார். இதுதொடர்பாக பானிப்பட் காவல் நிலையத்திலும் நர்சிங் புகார் அளித்துள்ளார்.

சாப்பாட்டில் கலப்பு
இந்நிலையில், இந்திய விளையாட்டு அத்தாரிட்டி (எஸ்ஏஐ) மையத்தில் நர்சிங் பயிற்சி எடுத்தபோது அவர் சாப்பிட்ட சாப்பாட்டில் ஊக்க மருந்தை கலந்ததாக ஒரு டீனேஜ் வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலீசாரிடம் சிக்கினார்
போலீசாரின் பிடியிலுள்ள வாலிபர் ஒரு பிரபல மல்யுத்த வீரர் ஒருவரின் சகோதரர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் 65 கிலோ எடை பிரிவில் மல்யுத்த ஜூனியர் பிரிவுக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

அவமானம்
ஊக்க மருந்தை சாப்பாட்டில் கலக்கியதை அந்த வாலிபரும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த நபரின் பெயர் விவரங்களை போலீசார் வெளியிட மறுத்து வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வீரருக்கு இந்தியரே எதிரியாக மாறிய சம்பவம் விளையாட்டு வட்டாரத்தில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications