திருவனந்தபுரம்: தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டுவரும் மத்திய அமைச்சர் சசிதரூர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். கொச்சி ஐபிஎல் அணியை ரெண்டவஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளதன் பின்னணியில் சசிதரூர் இருக்கிறார் என்று புதிதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
இதனை சசிதரூர் மறுத்துள்ளார். ஆனால் கொச்சி அணி உருவாக வேண்டும் என்று தான் விரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கமிஷனர் லலித் மோடியும், கொச்சி அணி சசிதரூர் ஆலோசனைப்படிதான் உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
2011-ம் ஆண்டில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான 2 புதிய அணிகளை புனே மற்றும் கொச்சி நகரங்களை மையமாக வைத்து அறிவித்துள்ளது ஐபிஎல்.
இதில் புனே அணியை ரூ.1,702 கோடிக்கு சகாரா குரூப் வாங்கியது. கொச்சி அணியை ரெண்டஸ்வஸ் என்ற விளையாட்டு அமைப்பு ரூ.1533 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இந்த 2 அணிகளின் மொத்த விலை ரூ.3,235 கோடியாகும். இது 2008-ம் ஆண்டு 8அணிகளும் ஏலம்போன தொகையை ரூ.395 கோடி கூடுதலாகும். 2008-ம் ஆண்டு 8அணிகளும் ரூ.2,840 கோடிக்குதான் விலை போயின.
இதற்கிடையே ரெண்டவஸ் விளையாட்டு அமைப்பின் பின்னணியில் வெளியுறவு துறை இணை அமைச்சர் சசிதரூர் இருப்பதாகவும், அதனால் தான் அந்த கொச்சி அணியை உருவாக்குவதிலும் அதை ரெண்டவஸ் ஏலம் எடுக்க வேண்டும் என்பதிலும் அவர் ஆர்வம் காட்டினார் என்றும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஆனால் இதை சசிதரூர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "கொச்சி அணியில் எனக்கு பங்கிருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. அந்த நிறுவனத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
அந்த அமைப்பின் நிர்வாகிகளான கெயக்வாட் சகோதரர்கள் என்னை சமீபத்தில் சந்தித்து கொச்சியை தலைமையிடமாக கொண்டு அணியை அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக ஐ.பி.எல். அமைப்பிடம் விண்ணப்பித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு அணி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நானும் விரும்பினேன். அதை ஐபிஎல்லிடம் தெரிவித்தேன். அதற்கு ஐபிஎல் ஒப்புக் கொண்டதால், ரெண்டவஸ் நிறுவனத்தை கொச்சி அணியை ஏலத்தில் எடுக்க உற்சாகப்படுத்தினேன். இதில் என்ன தவறு இருக்கிறது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடும் ஸ்ரீசாந்தின் ஒப்பந்தம் முடிகிறது. அவரும் கொச்சி அணிக்காக விளையாடத் தயாராக உள்ளார். இதனால் அவரை எடுக்க கொச்சி அணிக்காக எடுக்குமாறு ஆலோசனை கூறினேன்..." என்றார்.