காமன்வெல் துப்பாக்கி சுடுதலில் மூன்று பதக்கங்கள்
கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியின் 7ம் நாளான இன்று துப்பாக்கிச் சுடுதலில் ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது. இதுவரை 12 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என, மொத்தம், 24 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகின்றது. வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில் இந்தியா உள்பட 71 நாடுகளைச் சேர்ந்த 6,700 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் நாளில், மகளிர் பளுதூக்குதலில் மீராபாய் சானு தங்கம், குருராஜா வெள்ளி வென்றனர். இரண்டாவது நாளில், பளு தூக்குதலில் சஞ்சிதா சானு புதிய சாதனையுடன் தங்கம், 18 வயதாகும் தீபக் லேதர் வெண்கலம் வென்றனர். மூன்றாவது நாளில் பளுதூக்குதலில் வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கம், ரகலா வெங்கட் ராகுல் தங்கம் வென்று அசத்தினார்.
நான்காவது நாளில் மகளிர் பளு தூக்குதலில் பூனம் யாதவ் தங்கம், துப்பாக்கி சுடுதலில் 11-ம் வகுப்பு மாணவி மனு பாக்கர் தங்கமும், ஹீனா சித்து வெள்ளியும், 10 மீட்டர் ஆடவர் ஏர் ரைபிள்ஸ் பிரிவில் ரவிக்குமார் வெண்கலமும் வென்றனர். பளுதூக்குதலில் விகாஸ் தாகுர் வெண்கலம் வென்றார். அதைத் தொடர்ந்து மகளிர் டேபிள் டென்னிஸ் அணி தங்கம் வென்றது.
ஐந்தாவது நாளில் ஆடவருக்கான 105 கிலோ பளுதூக்குதல் பிரிவில் பிரதீப்சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ஜித்து ராய் தங்கம், ஓம் மிதர்வால் வெண்கலம் வென்றனர். ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி தங்கம், பாட்மின்டன் அணி தங்கம் வென்றது.
ஆறாவது நாளான நேற்று, மகளிர் துப்பாக்கி சுடுதலில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஹீனா சிந்து தங்கம் வென்று அசத்தினார். பாரா பளுதூக்குதலில், ஆடவர் ஹெவிவெயிட் பிரிவில், இந்திய மாற்றுத் திறனாளி வீரர் சச்சின் சவுத்ரி வெண்கலம் வென்றார்.
போட்டியின் 7வது நாளான இன்று துப்பாக்கிச் சுடுதலில் ஒரு தங்கம், இரண்டு வெண்கலம் கிடைத்தது. மகளிர் டபுள் டிராப் பிரிவில் ஸ்ரேயாசி சிங் தங்கம் வென்றார். ஆடவர் டபுள் டிராப் பிரிவில் அங்குர் மிட்டல் மற்றும் ஆடவர் 50 மீட்டர் பிஸ்டர் பிரிவில் ஓம் பிரகாஷ் மிதர்வால் வெண்கலம் வென்றனர்.
இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 12 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என, 24 பதக்கங்கள் கிடைத்துள்ளன.


Click it and Unblock the Notifications