தெ.ஆப் 540 ஆல் அவுட்-சேவாக் பதிலடியால் இந்தியா 82/0

சென்னை சேப்பாக்கத்தில் இந்திய- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடக்கிறது. இரண்டாம் நாளான நேற்று தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 540 ரன்களை குவித்தது. தொடர்ந்து களம் இறங்கிய இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மென்களான வீரேந்திர சேவாக்கும், வாசிம் ஜாபரும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். ஆட்டநேர முடிவில் சேவாக் 52 ரன்களும், ஜாபர் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
முன்னதாக, 304 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தெ.ஆப்பிரிக்கா தொடர்ந்தது. ஹசிம் அம்லா 85 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்றைய ஆட்டத்தில் ஹசிம் அம்லா மிகவும் சிறப்பாக விளையாடி 'சதம்' அடித்தார். 174 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 100 ரன்னை எட்டினார்.
23வது டெஸ்டில் விளையாடும் அம்லாவுக்கு இது 4வது சதம் ஆகும். இந்தியாவுக்கு எதிராக முதல்முறை. இதற்கு முன்பு அவர் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்தியா வீசிய 96.4 ஓவர்களில் தென்.ஆப்பிரிக்கா 350 ரன்களை தொட்டது. 357 ரன்களை எட்டியபோது ஸ்ரீசாந்த் வீசிய பந்தில் டிவில்லியர்ஸ் ஆட்டம் இழந்தார். 5வது விக்கெட் ஜோடிக்கு அம்லாவும் டிவில்லியர்ஸும் சேர்ந்து 63 ரன்களை குவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து பேட் செய்ய வந்த விக்கெட் கீப்பர் மார்க் பௌச்சர் 6 வது விக்கெட்டுக்கு அம்லாவுடன் ஜோடி சேர்ந்தார்.
தொடர்ந்து மதிய இடைவேளைக்குப் பிறகு அம்லாவின் ஆட்டம் அபாரமாக இருந்தது. மிகச்சிறப்பாக விளையாடி 248 பந்துகளில் 19 பவுண்டரிகளை விளாசிவிட்டு 150 ரன்களை குவித்தார். இந்தியாவுக்கு எதிராக 150 ரன்களை கடந்த நான்காவது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
அம்லா 159 ரன்னில் ரன் அவுட்டானார். அதன்பிறகு தென் ஆப்பிரிக்கா விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கியது. 152.5 ஓவரில் 540 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
சிக்கலில் மாட்டுவாரா ஸ்ரீசாந்த்?
இன்றைய ஆட்டத்தின்போது தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன் டிவில்லியர்சுடன் சொற்போரில் ஈடுபட்ட ஆக்ரோஷ வீரர் ஸ்ரீசாந்த் சிக்கலில் மாட்டும் வாய்ப்பு உள்ளது.
சென்னை சிதம்பரம் ஆடுகளம் சுழல்பந்து வீச்சாளர்களுக்கே சாதகமாக இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட் எடுக்கும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இதனால் பொறுமை இழந்த ஸ்ரீசாந்த், ஒருகட்டத்தில் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் கிரீசில் நின்றபோது, ஆக்ரோஷமாக ஓடிச்சென்று அவரிடம் ஏதோ பேசினார். டிவில்லியர்ஸ், ஸ்ரீசாந்த் வீசிய பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, பேட்டால் பதிலடி கொடுத்தார்.
பின்னர் ஸ்ரீசாந்த் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்த டிவில்லியர்ஸ் பெவிலியன் திரும்பினார். அவர் ஆட்டமிழந்தவுடன், ஸ்ரீசாந்த் அவரை பார்த்து முறைத்தபடி ஆக்ரோஷத்துடன் கத்தினார். அந்த ஓவர் முடிந்தவுடன் அம்பயர் டோனி ஹில், ஸ்ரீசாந்துடன் ஏதோ பேசினார்.
ஸ்ரீசாந்த் மீது அம்பயர் புகார் செய்தால், அவர் மீது மேட்ச் ரெப்ரி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
சொற்போரை தவிர்க்கும்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கேப்டன்கள், வீரர்களுக்கு கடிதம் எழுதிய சில நாட்களிலேயே ஸ்ரீசாந்த் சிக்கலில் மாட்டியிருப்பது துரதிருஷ்டவசமானது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:20 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications