
பாதுகாப்பு ஏற்பாடுகள்
கொரோனா பாதுகாப்பு ஏற்பாடாக அயல்நாட்டு வீரர்கள் அனைவரும் டோக்கியோவிற்கு வருவதற்கு முன்பாக 2 பரிசோதனை மேற்கொண்டு அதில் நெகடிவ் ரிசல்ட் வந்திருக்க வேண்டும் என ஜப்பான் நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதே போல டெல்டா ப்ளஸ் எனப்படும் புதுவகை கொரோனா பரவி வரும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் வீரர்கள் டோக்கியோவிற்கு கிளம்புவதற்கு 7 நாட்களுக்கு முன்னதாக இருந்து தினந்தோறும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம்
இந்நிலையில் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அந்நாடு முழுவதும் ஆங்காங்கே சேர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பி வந்த போராட்டக்காரர்கள் நேற்று திடீரென தலைநகர் டோக்கியோவின் தலைமை நிர்வாக அலுவலகத்தில் இருந்து ஒலிம்பிக் கமிட்டி தலைமையகம் வரை பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர்.

கொரோனா அச்சுறுத்தல்
நாட்டில் பல்வேறு மக்கள் கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையிலும் ஜப்பான் அரசு ஒலிம்பிக் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்லாயிரம் கோடிகளை செலவழித்து வருவதாக அவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

போராட்டக்காரர்கள் உறுதி
பத்திரிகையாளர்களிடம் பேசிய சில போராட்டக்காரர்கள், நாங்கள் விளையாட்டு போட்டிகளை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் தற்போது உள்ள சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் எங்குமே நடைபெறக்கூடாது. இதற்கு மேலும், உயிர்களை பறிகொடுக்க நாங்கள் தயாராக இல்லை. அவை நடைபெறக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மக்களின் எதிர்பார்ப்பு
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக உலகமெங்கும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தயாராகி வருகின்றனர். இந்த போட்டிகளுக்காக பெரும் செலவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மக்களின் எதிர்ப்பை ஏற்று ஜப்பான் நாட்டு அரசு ஒலிம்பிக் போட்டியின் அனுமதியை ரத்து செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications