நீச்சல் போட்டி: அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டார் சாஜன் பிரகாஷ்.. எனினும் பதக்கம் வெல்ல மற்றொரு வழி!
ஜப்பான்: ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் சாஜன் பிரகாஷ் தோல்வியை சந்தித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிக்காக முதல் முறையாக தேர்வான இந்திய வீரர் சாஜன் பிரகாஷ் ஆவர்.
காவல்துறை அதிகாரியான இவர், தனது முதல் ஒலிம்பிக்கில் எப்படியும் ஒரு பதக்கத்தை தட்டிச்செல்வார் எனக்கூறப்பட்டது. ஆனால் அந்த நம்பிக்கை பொய்யாகியுள்ளது.

போட்டி
இந்திய நீச்சல் வீரர் சாஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்ஃப்ளை ஹீட் பிரிவில் கலந்துக்கொண்டார். முழு திறனையும் வெளிப்படுத்திய அவர் போட்டி தூரத்தை 4வது வீரராக கடந்தார். 200 மீ தூரத்தை கடக்க அவர் எடுத்துக்கொண்ட நேரம் 1.57.22 ஆகும். இவர் 4வது வீரராக வந்திருந்தாலும், அடுத்த சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற முடியாது.

காரணம் என்ன
இந்த நீச்சல் போட்டி மொத்தம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்றது. அனைத்து குழுவிலும் உள்ள வீரர்கள் எவ்வளவு நேரத்தில் போட்டி தூரத்தை கடந்தனர் என்பதை கணக்கிட்டுதான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். அந்தவகையில் முதல் 16 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். ஆனால் சாஜன் பிரகாஷ் ஒட்டுமொத்தமாக 24வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் தோல்வி உறுதியாகியுள்ளது.

அடுத்த வாய்ப்பு
இந்த போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல சாஜன் பிரகாஷுக்கு மேலும் ஒரு வாய்ப்புள்ளது. இவர் 200 மீ பிரிவு மட்டுமல்லாது 100 மீ பட்டர்ஃபளை சுற்றிலும் கலந்துக்கொள்ளவுள்ளார். இந்த தகுதிச்சுற்று போட்டி வரும் ஜூலை 29ம் தேதி நடைபெறவுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்
நீச்சல் போட்டியை பொறுத்தவரை இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மானா படேல், தோல்வியடைந்து நடையை கட்டினார். இதே போல ஆண்கள் பிரிவில் ஸ்ரீ ஹரி நடராஜனும் தோல்வியை தழுவி டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டனர்.


Click it and Unblock the Notifications