டெல்லி: சூதாட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல போட்டி நடுவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கூட தொடர்பு உள்ளது என ஐ.பி.எல். அமைப்பின் முன்னாள் தலைவரான லலித் மோடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து லலித் மோடி டுவிட்டரில் கூறியுள்ளதாவது, கிரிக்கெட் வீரர்கள் மட்டும் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை. போட்டி நடுவர்கள் மற்றும் நிர்வாகிகளும் கூட சில போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்ல அதில் தொடர்புடையவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இது குறித்து தற்போது நான் அதிகம் பேச முடியாது. இன்னும் பல வீரர்களின் சூதாட்டம் குறித்து நீதிமன்றத்துக்கு விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கிறேன். மேட்ச் பிக்சிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் பலரும் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அந்த தகவல்களை வெளியே தெரியாமல் மறைத்துவிடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.