ஐதராபாத் : கால்பந்து, கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுப் போட்டிகளில் மைதானத்தில் விளையாடும் போது வீரர்கள் மயங்கி உயிரிழந்த சம்பவத்தை நாம் பார்த்திருப்போம்.
ஆனால் மூளைக்கு வேலை கொடுக்கும் செஸ் போட்டியில் விளையாடும் போது உட்கார்ந்து இடத்திலே வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செஸ் போட்டி அறிவு கூர்மையை வளப்படுத்தும். இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செஸ் போட்டியை ஆர்வமுடன் விளையாடுவார்கள். செஸ் விளையாட்டின் அடிப்படை தெரிந்தாலே நாமும் விளையாடலாம். இந்த நிலையில் ஹைதராபாத்தில் செஸ் தொடர் ஒன்று நடைபெற்றது. அதில் செஸ் தரவரிசையில் 1600 புள்ளிகளுக்கு கீழ் பெற்ற வீரர்கள் விளையாடி வருகிறார்கள். அதில் சாய் என்ற 72 வயதான நபர் ஹைதராபாத் செஸ் மையத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
தன் வயதையும் பொருட்படுத்தாமல் சாய் தொடர்ந்து செஸ் போட்டிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். இந்த நிலையில் நேற்று 5ஆம் சுற்று ஆட்டம் நடைபெற்றது. அப்போது விளையாடிக் கொண்டிருந்த சாய் திடீரென்று மயங்கி சரிந்தார். இதனை அடுத்துப் போட்டி அமைப்பாளர்கள் சாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் சக போட்டியாளர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாய் எப்போதுமே செஸ் போட்டி நடைபெற்றால் அதில் வயது வரம்பு இன்றி குழந்தைகளுடன் கூட எவ்வித தயக்கமும் இன்றி விளையாடுவாராம். செஸ்சை உயிராக நேசித்து வந்த சாய் செஸ் போட்டியில் விளையாடும் போது உயிரிழந்திருக்கிறார்.
சாய்க்கு உடல் அளவில் ஏதேனும் பிரச்சனை இருந்திருக்கலாம் என்றும் அதனால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் செஸ் போட்டி விளையாடும் போது மூளை அதிகமாக வேலை செய்வதால் சில சமயம் மனதளவில் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது எல்லா விளையாட்டுப் போட்டிகளுக்குமே ஏற்படும் ஒரு விஷயம் தான். செஸ்சில் தீமைகளை விட நன்மைகளே மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.