பெங்களூர்: ராபின் உத்தப்பா, வினய் குமார் ஆகியோரின் அபார ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸைத் தோற்கடித்தது.
ஐபிஎல் தொடரில் நேற்று இரவு பெங்களூரில் நடந்த போட்டியில், சென்னையும், பெங்களூரும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது.
முதலில் ஆடிய பெங்களூர் அணி ரன் எடுக்கத் திணறியது. காரணம் முரளிதரனின் சிறப்பான பந்து வீச்சு. இதனால் ஆரம்பத்தில் ரன் எடுக்கத் தடுமாறியது பெங்களூர்.
பான்டே 20 ரன்களும், கல்லிஸ் 19 ரன்களும் எடுத்தனர். பின்னர் வந்தார் ராபின் உத்தப்பா. அதிரடியாக ஆடிய அவர் 38 பந்துகளில் 68 ரன்களைக் குவித்தார். அதேபோல இளம் வீரர் விராத் கோஹ்லியும் 24 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார்.
ஆரம்பத்தில் தடுமாறிய பெங்களூர் இறுதியில், 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து சென்னை அணி பேட்டிங்கைத் தொடங்கியது. பார்த்திவ் படேல் ஒரு ரன்னில் அவுட் ஆகிச் செல்ல, ஹெய்டனும், பெய்லியும் ரன் சேர்க்க இணைந்தனர்.
இருவரும் ஆரம்பத்தில் கட்டையைப் போட்டனர். பின்னர் ஹெய்டன் அடித்து ஆட ஆரம்பித்தார். இருவரும் சேர்ந்து நிதானமாக ரன் குவிப்பை உயர்த்தத் தொடங்கியபோது ஹெய்டன் துரதிர்ஷ்டசமாக ரன் அவுட் ஆகி விட்டார்.
32 ரன்கள் சேர்த்தார் ஹெய்டன். பின்னர் வந்த சுரேஷ் ரெய்னாவும், முரளி விஜய்யும் சோபிக்கத் தவறினர். பெய்லியும் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பத்ரிநாத் வந்து அதிரடியாக ஆடிய 31 ரன்களைச் சேர்த்தார்.
அல்பி மார்க்கலின் பங்கு 19 ரன்கள். அஸ்வின் 11 ரன்களைச் சேர்த்தார்.
வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி நிதானமாக முன்னேறியதாலும், பெங்களூர் அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்ததாலும், சென்னைக்கு அணிக்கு பிரஷர் அதிகமாகிப் போனது.
குறிப்பாக வினய்குமாரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. அபாரமாக பந்து வீசிய வினய் குமார் சென்னை அணியின் 4 விக்கெட்களைய் சாய்த்து அணியை நிலை குலைய வைத்து விட்டார்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 7விக்கெட்களை இழந்து 135 ரன்களில் சுருண்டு போனது.
ஆட்ட நாயகனாக ராபின் உத்தப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார்.