வரலாறு படைத்த வைஷாலி.. மகளிர் கேண்டிடேட்ஸ் தொடர் சாம்பியன் ஆனார்.. உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி
நிகோசியா: சைப்ரஸ் நாட்டின் நிகோசியா நகரில் நடைபெற்ற 2026-ம் ஆண்டுக்கான சர்வதேச செஸ் கூட்டமைப்பின் மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில், இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். வைஷாலி சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் மகளிர் கேண்டிடேட்ஸ் தொடரில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற 14-வது மற்றும் இறுதிச் சுற்று ஆட்டத்தில், வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய 24 வயதான வைஷாலி, ரஷ்யாவின் அனுபவ வீராங்கனையான கேடரினா லாக்னோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 48-வது நகர்த்தலில் வைஷாலி அபார வெற்றி பெற்றார்.

கடும் போட்டி
இறுதிச் சுற்றுக்கு முன்னதாக வைஷாலி மற்றும் கஜகஸ்தானின் பிபிசாரா அசுபயேவா ஆகிய இருவரும் தலா 7.5 புள்ளிகளுடன் கூட்டுத் தலைமையில் இருந்தனர். இதனால் இறுதிச் சுற்றின் முடிவு மிகவும் முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இந்த இக்கட்டான சூழலில், மற்றொரு இந்திய வீராங்கனையான திவ்யா தேஷ்முக், கஜகஸ்தான் வீராங்கனை பிபிசாராவை 36-வது நகர்த்தலில் டிரா செய்ய வைத்தார். இது வைஷாலிக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது.
துணிச்சலான முடிவு
இறுதிப் போட்டியில் வைஷாலி டிரா செய்திருந்தாலே சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு இருந்தது. இருப்பினும், மற்றவர்களின் முடிவை எதிர்பார்க்காமல் தனது திறமையால் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்ற துணிச்சலுடன் விளையாடிய வைஷாலி, லாக்னோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
உலக சாம்பியன்ஷிப்
இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் தகுதியை வைஷாலி பெற்றுள்ளார். அங்கு அவர் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் ஜு வென்ஜுனை எதிர்கொள்ள உள்ளார். உலக சாம்பியன் பட்டத்திற்கான இந்த சவால் இந்திய செஸ் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
செஸ் உலகில் இந்தியாவின் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள வைஷாலியின் இந்தச் சாதனைக்கு விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இவரது தம்பி பிரக்ஞானந்தா செஸ் உலகில் பல சாதனைகளைச் செய்து வரும் நிலையில், அக்காவான வைஷாலியும் உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சர்வதேச செஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துவது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வைஷாலியின் இந்த வெற்றி இந்திய வீராங்கனைகளுக்குப் பெரும் ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications