சென்னை: முரளி விஜய் போட்ட அபார சதம், அல்பி மார்க்கலின் அட்டகாச அரை சதம், பேட்டிங்கில் குவித்த உயர்ந்தபட்ச ஸ்கோர் ஆகியவற்றின் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
முதல் லீக் போட்டியில் தட்டுத் தடுமாறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 2வது லீக் சுற்றை அட்டகாசமாக ஆரம்பித்துள்ளது. தனது முதல் போட்டியில் பெங்களூரை போட்டுப் புரட்டிய சென்னை, நேற்று சென்னையில் நடந்த 2வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் நொறுக்கிப் போட்டது.
முரளி விஜய் காட்டிய ஆவேச விஸ்வரூபம், ராஜஸ்தான் அணியினரை நிலை குலையச் செய்து விட்டது. புயல் வேகத்தில் ஆடிய முரளி விஜய், 56 பந்துகளில் 127 ரன்களைக் குவித்து சென்னை அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவினார்.
11 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் விளாசித் தள்ளி விட்டார் முரளி விஜய். டுவென்டி 20 போட்டிகளில் விஜய் அடித்துள்ள அதிகபட்ச ஸ்கோர் இதுதான். மேலும், ஐபிஎல் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த 4வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
முரளி விஜய்யின் உதவியால் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்களைக் குவித்தது. இதுதான் ஐபிஎல் போட்டிகளிலேயே ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 240 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இதையும் எடுத்தது சென்னைதான். 2008ல் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இந்த ஸ்கோரை எடுத்து சாதனை படைத்திருந்த்து சென்னை. தற்போது அதுவே தனது சாதனையை முறியடித்துள்ளது.
இமாலய ஸ்கோரை விரட்டும் முயற்சியில் பின்னர் இறங்கிய ராஜஸ்தானுக்கு நமன் ஓஜாவும், லம்ப்பும் அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். குறிப்பாக ஓஜாவின் ஆட்டம் அட்டகாசமாக இருந்தது.
பிரமாதமாக ஆடிய அவரது ஆட்டத்தையும், பின்னர் ஆடிய வாட்சனையும் பார்த்தபோது ராஜஸ்தான் வெற்றிக் கோட்டைத் தொட்டு விடுமோ என்ற பயம் சென்னை ரசிகர்களுக்கு ஏற்பட்டது.
ஆனால் கேப்டன் டோணி பந்து வீச்சு உத்திகளை மாற்றி ராஜஸ்தானை ஆட்டம் காண வைத்து விட்டார். ஓஜா ஆட்டமிழக்காமல் 94 ரன்களைக் குவித்தார். வாட்சனின் பங்கு 60 ரன்களாகும். லம்ப் 37 ரன்கள் குவித்தார்.
இறுதியில், 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்த ராஜஸ்தான் 223 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
சென்னை அணிக்கு நேற்று கிடைத்தது 4வது வெற்றியாகும். ராஜஸ்தானுக்கு 5வது தோல்வியாகும். புள்ளிகள் பட்டியலில் தற்போது சென்னை அணி 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் 6வது இடத்துக்குப் போய் விட்டது.