பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், 100 கிராம் எடை அதிகரித்ததாக கூறி அவரை ஒலிம்பிக் சம்மேளனம் தகுதி நீக்கம் செய்தது. வினேஷ் போகட் இறுதிப்போட்டி வரை வந்துள்ளதால் அவருக்கு வெள்ளி பதக்கம் ஆவது கொடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மல்யுத்த போட்டிகளின் விதி மிகவும் மோசமாக இருப்பதாகவும் அதனை மாற்ற வேண்டும் என அமெரிக்க மல்யுத்த ஜாம்பவான் ஜார்டன் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் இறுதி போட்டியில் வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அரையிறுதியில் அவரிடம் தோற்ற கியூபா வீராங்கனைக்கு இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த சூழலில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து வினேஷ் போகட் சர்வதேச விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். முதலில் தாம் இறுதிப் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என்று வினேஷ் போகத் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் வழக்கு விசாரணை வருவதற்கு முன்பு இறுதிப்போட்டி நடைபெற்று விடும் என்பதால் தனது மனுவை திருத்தி தமக்கு வெள்ளி பதக்கம் வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்து இருக்கிறார். இதை அடுத்து இந்த வழக்கு இன்று விசாரிக்கப்படும் என விளையாட்டு துறைக்கான தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் வினேஷ் போகத் தொடர்பான வழக்கில் இன்று இடைக்காலத் தீர்ப்பு ஒன்று வழங்கவும் தீர்ப்பாயம் முடிவெடுத்து இருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் இயங்கும் இந்த தீர்ப்பாயம் சர்வதேச அளவில் உள்ள விளையாட்டு துறைக்கான சட்டரீதியிலான பிரச்சனைகளை விசாரித்து முடிவு வழங்கும். இந்த தீர்ப்பாயம் பல்வேறு பிரச்சனைகளையும் விளையாட்டு தொடர்பான வழக்குகளையும் விசாரித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதனால் வினேஷ் போகட் விவகாரத்திலும் அவருக்கு நீதி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வினேஷ் போகட்டுக்கு பதக்கம் கிடைக்காது என எதிர்பார்த்த நிலையில் இந்த ட்விஸ்ட் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.