Vinesh Phogat : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தம் வீராங்கனை வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய நிலையில் எடை அதிகரித்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் தங்கம் அல்லது வெள்ளி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போக்கத்துக்கு எந்த பதக்கமும் கிடைக்காமல் போனது.
இதனை எதிர்த்து வினேஷ் போகத் சுவிட்சர்லாந்தில் இயங்கி வரும் சர்வதேச விளையாட்டு துறைக்கான தீர்ப்பாயத்தின் வழக்கு தொடர்ந்தார். அதில் தாம் இறுதிப்போட்டி வரை வந்திருப்பதால் தமக்கு வெள்ளி பதக்கத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இது தொடர்பான இறுதி தீர்ப்பு வெள்ளிக்கிழமை வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது முன்கூட்டியே தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதில் வினேஷ் போகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் பி டி உஷா தனது ஏமாற்றத்தை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் வெறும் 100 கிராம் எடை அதிகரிப்புக்காக இறுதிப்போட்டி வரை வந்த வீராங்கனை தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த விதி தேவையா என்பது குறித்து கூர்ந்து ஆராய வேண்டும்.
நாங்கள் வினேஷ் போகத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம். மேலும் இந்த சவாலான சூழலை நாங்கள் மக்களின் துணையுடன் கடந்து செல்வோம் என்று பிடி உஷா கூறியுள்ளார்.ஆனால் இதே பி டி உஷா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எடை அதிகரித்ததற்கு விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் தான் பொறுப்பு என்று கூறி அதிர்ச்சியை கிளப்பினார்.
வழக்கு விசாரணையில் இருந்து கொண்டிருந்தபோது இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவராக இருந்த பி டி உஷா இவ்வாறு கூறியது தீர்ப்பு எவ்வாறு வரப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரியவைத்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்திய ஒலிம்பிக் சம்மேளனம், வினேஷ் போகத்துக்கு உரிய ஆதரவு அளிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ளனர்.