பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் வினேஷ் போகட் அனுமதிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் விளையாட்டு உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் முதல் நாள் விளையாடிவிட்டு பின் அடுத்த நாளில் மீண்டும் எடையை நிர்ணயம் செய்யும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் வினேஷ் போகட் இறுதிப் போட்டி வரை வந்த பிறகுதான் எடை அதிகரித்ததாக கணக்கில் எடுத்துக்கொண்டு, அவருக்கு வெள்ளி பதக்கத்தை வழங்க வேண்டும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல அமெரிக்க மல்யுத்த வீரர் ஜார்டன் போரோக் மல்யுத்த சம்மேளனத்தை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். ஆறு முறை உலக சாம்பியன், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் போன்ற பட்டங்களை வென்ற ஜார்டன் மல்யுத்தத்தில் மிகப்பெரிய ஜாம்பவானாக கருதப்படுகிறார். இந்த நிலையில் வினேஷ் போகட்டுக்கு அனுதி இழைக்கப்பட்டதாக கருதி அவர் பல்வேறு கருத்துகளை முன் வைத்திருக்கிறார்.
வீரர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சர்வதேச மல்யுத்த சம்மேளனம், தங்களது விதிகளை மாற்ற வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இரண்டாவது நாள் எடையை பரிசோதிக்கும் போது குறைந்தபட்சம் அனுமதிக்கப்பட்ட எடையை விட ஒரு கிலோ கூடுதலாக இருக்கலாம் என்று விதியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.

இதை போன்று தற்போது மல்யுத்த போட்டிகளுக்கான எடை காலை எட்டு முப்பது மணிக்கு பரிசோதிக்கப்படுகிறது. இதனை 10:30 மணிக்காக மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ள அவர், தொடர்ந்து எடை பரிசோதனையில் வீராங்கனை தோல்வியை தழுவி விட்டால் அந்தப் போட்டியை கைவிட்டு எதிர் வீரருக்கு தங்கப் பதக்கத்தையும் எடை தேர்வில் தோல்வியடைந்த வீரருக்கு வெள்ளி பதக்கத்தையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
வினேஷ் போகத் அரையிறுதி வரை வந்து தான் எடை பரிசோதனையில் தோல்விய தழுவி இருப்பதால் அதை கணக்கில் எடுத்துக் கொண்டு இனி வரும் காலங்களில் வெள்ளிப் பதக்கத்தை வழங்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதனால் வினேஷ் போகட்டுக்கு வெள்ளி பதக்கத்தை வழங்குங்கள் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார். மல்யுத்த ஜாம்பவானை தங்களது விளையாட்டில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி பேசியிருப்பது வினேஷ் போகட்டுக்கு பெருகும் ஆதரவை காட்டி இருக்கிறது.