Vinesh Phogat - கீழே சரிந்த வினேஷ்.. பதறிய சக வீரர்கள்.. பாராட்டு விழா மேடையில் நடந்த சம்பவம்
ஹரியானா: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் 50 கிலோ மல்யுத்தத்தின் இறுதிப் போட்டிக்கு முன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகட், தனது கிராமத்தில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் மயக்கம் அடைந்து சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகட் 100 கிராம் கூடுதல் எடை இருந்த காரணத்தால் இறுதிப் போட்டிக்கு முன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் விளையாட்டுக்கான நீதிமன்றத்தில் முறையிட்டும் அவருக்கு இறுதிப் போட்டி வரை முன்னேறியதற்கான வெள்ளிப் பதக்கம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் வினேஷ் போகட் இந்தியா திரும்பிய போது அவரது கிராம மக்களும், சக மல்யுத்த வீரர்களும் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளித்தனர். அவரது கிராமத்தில் பல்வேறு இடங்களில் அவருக்கு பாராட்டு விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஒரு பாராட்டு விழாவில் மேடையில் அமர்ந்து இருந்த வினேஷ் போகட் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்த சக வீரர் பஜ்ரங் புனியா அவருக்கு தண்ணீர் கொடுத்தார்.
பின்னர் வினேஷ் போகட் தன்னால் அமர முடியவில்லை எனக் கூறி பின்புறமாக சாய்ந்து கொண்டார். அதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தான் பாரிஸில் இருந்து 20 மணி நேரம் பயணம் செய்து இந்தியா வந்ததாகவும், அப்போது இருந்து ஓய்வு இல்லாமல் விழாக்களில் பங்கேற்று வருவதால் உடற் சோர்வு அடைந்திருப்பதாகவும் கூறினார்.
பின்னர் பாராட்டு விழாவில் பேசிய வினேஷ் போகட், "இத்தனை பாராட்டுகளையும் பெறுவதற்கான தகுதி எனக்கு உள்ளதா? என தெரியவில்லை. இந்த கிராமத்தில் பிறந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த கிராமத்துக்கு செய்ய வேண்டிய கடமைகள் எனக்கு உள்ளன. பெண்களுக்கான எனது போராட்டத்தை கைவிட மாட்டேன். இறுதி வரை போராடுவேன்." என்றார். இதன் மூலம் அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிரான தனது போராட்டத்தை தொடர உள்ளதாக அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications