பாரிஸ்: 2024 ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த விளையாட்டில் மகளிர் 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட். இறுதிப் போட்டிக்கு தேர்வான பின்னரும் 100 கிராம் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அதற்கு எதிராக அவர் விளையாட்டுக்கான நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகி உள்ளது.
முன்னதாக அவருக்கு வெள்ளிப் பதக்கம் அளிக்கப்படாது என்ற தகவல் நீதிமன்றத்தால் கூறப்பட்டிருந்தது. தற்போது நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில் விதிப்படி வினேஷ் போகட்டுக்கு வெள்ளிப் பதக்கம் அளிக்க முடியாமல் போனாலும், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டு இருக்கிறது.

வினேஷ் வெற்றி பெற்ற போட்டிகளுக்கான தகுதியை மட்டும் பெற்றிருந்தால் அது நியாயமான தீர்வாக இருந்திருக்கும். மாறாக அவர் ஒட்டுமொத்த தரவரிசையில் இருந்தும் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது கடுமையான முடிவாக இருப்பதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. இந்த வழக்கின் முழு தீர்ப்பு விவரம் இங்கே -
1. இரண்டாவது எடை சரிபார்ப்பின் போது வினேஷ் போகட்டின் எடை 50 கிலோவை விட கூடுதலாக இருந்தது என்பதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. வினேஷின் வாதம் என்னவென்றால் இது மிக குறைவான எடை அதிகரிப்பு மட்டுமே. மாதவிடாய் சுழற்சி, உடலில் நீர் தக்க வைக்கும் திறன், ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து எடை சரி பார்க்கும் மையத்திற்கு வர நீண்ட நேரம் ஆனதால் எடை குறைப்புக்கு அதிக நேரம் ஒதுக்க முடியாமல் போனது என்பதாகும்.
2. இங்கே இந்த வீராங்கனையின் பிரச்சனை என்னவென்றால் விதிகள் மிகவும் தெளிவாக உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட எடை அனைத்து போட்டியாளர்களுக்கும் சமமாகவே உள்ளது. இதில் எந்த விதமான பாரபட்சமும் பார்க்கப்படாது. இதுதான் அதிகபட்ச எடை. உடையின் எடை அளவு கூட கூடுதலாக ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே, நிர்ணயிக்கப்பட்ட எடை விகிதத்திற்குள் இருக்க வேண்டியது ஒரு போட்டியாளரின் பொறுப்பு ஆகும்.
3. விதிகளின்படி எந்த விஷயத்தையும் நீதிமன்றத்தால் அமல்படுத்த முடியாத நிலை உள்ளது. இரண்டாவது எடை சரிபார்ப்புக்கு பின் தகுதி நீக்கம் செய்யப்படுவது என்பது இறுதிப் போட்டிக்கு மட்டுமே இருக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக வழக்கை தொடுத்தவருக்கு எதிராக விதிகள் உள்ளன.
4. இந்த வீராங்கனை ஆர்டிகிள் 11இல் குறிப்பிடப்பட்ட உள்ள விளைவுகளை இறுதிப் போட்டிக்கு மட்டுமே செல்லுபடியாகும்படி மாற்ற வேண்டும் என கூறி இருக்கிறார். ஒட்டுமொத்த போட்டிகளுக்கும் அதை அமல்படுத்தக் கூடாது எனக் கூறி இருக்கிறார். ஆனால், வீராங்கனை இரண்டாவது நாள் எடை சரி பார்ப்பின் பின் போது தோல்வி அடைந்து இருப்பதால் ஆர்டிகிள் 11-இல் உள்ள விதிகளை மாற்றுமாறு அவரால் கேட்க முடியாது.
5. இந்த வீராங்கனை, எடை வரம்பை அந்த நாளில் அவருக்கு ஏற்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றுமாறும், எடை வரம்பில் சகிப்புத்தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறி இருக்கிறார். ஆனால், எந்த அளவுக்கு சகிப்புத்தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறவில்லை. ஆனால், விதிகளின்படி அப்படி ஏற்றுக் கொள்ள முடியாது. 50 கிலோ எடை உச்சவரம்பு என்பது தான் கடைசி வரம்பு. அதில் தனிப்பட்ட முறையில் மாறுதல்களை ஏற்கச் செய்ய முடியாது.
6. இந்த வீராங்கனை முதல் நாளன்று எடை சரி பார்ப்பில் தேர்ச்சி அடைந்துள்ளார். ஆனால், இரண்டாவது நாளும் அதை செய்ய வேண்டிய கடமை அவருக்கு இருந்துள்ளது. ஆர்டிகிள் 11 விதிகளின் படி அவர் ஒட்டுமொத்த போட்டிகளில் இருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, தர வரிசையில் கடைசி இடத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார். எனினும், முதல் நாள் ஆட்டத்தின் செயல்பாட்டின் அடிப்படையில் தனக்கு வெள்ளி பதக்கம் அளிக்க வேண்டும் என அவர் கேட்டு இருக்கிறார்.
7. தனக்கு பதிலாக தன்னிடம் அரை இறுதியில் தோற்ற வீராங்கனை இறுதிப் போட்டியில் பங்கேற்றார் என்பதை இந்த வீராங்கனை ஒப்புக்கொள்கிறார். இறுதிப் போட்டியில் அவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் அளித்ததையும் ஒப்புக்கொள்கிறார். எந்த ஒரு வீராங்கனையும் தனது பதக்கத்தை இழக்க வேண்டும் என அவர் கூறவில்லை. ஆனால், இரண்டாவது வெள்ளி பதக்கம் அளிக்க வேண்டும் என கூறி இருக்கிறார். ஆனால், எதன் அடிப்படையிலும் நீதிமன்றம் அவருக்கு வெள்ளிப் பதக்கத்தை அளிக்க முடியாது.
8. யுனைட்டட் வேர்ல்ட் ரெஸ்லிங் விதிப்படி ஒரு மல்யுத்த வீரர் தொடர் முழுவதும் தனது தகுதியை தக்க வைக்க வேண்டும். எந்த இடத்திலும் ஒரு பகுதி மட்டும் தகுதி பெற்று இருக்கலாம் என குறிப்பிடவில்லை. இதன் மூலம் ஒரு வீரர் தகுதியை இழந்தால் அது ஒட்டுமொத்த போட்டிகளுக்கும் பொருந்தும். அப்படி நடந்தால் ஆர்டிகிள் 11இல் குறிப்பிடப்பட்டுள்ள விளைவுகளை வீராங்கனை சந்திக்க வேண்டும்.
9. எந்த வகையிலும் நீதிமன்றம் வினேஷ் போகட் கேட்கும் தீர்வை அளிக்க முடியாது என்பதால் அவரது விண்ணப்பத்தை நிராகரிக்கிறது.
10. இரண்டாவது எடை சரி பார்ப்பில் தோல்வி அடைந்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் தகுதியை அவர் இழக்கும் முன், இந்த வீராங்கனை 50 கிலோ எடைப் பிரிவில் களத்தில் புகுந்து, போட்டியிட்டு, மூன்று சுற்றுகளை வென்று. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார் என்பதை இந்த நீதிமன்றம் கவனித்து இருக்கிறது. அவரது தரப்பில் எந்த தவறும் இல்லை.