வினேஷ் போகத் வழக்கில் மீண்டும் டிவிஸ்ட்.. விளையாட்டு துறை தீர்ப்பாயம் மீது இந்திய தரப்பு அதிருப்தி
ஒலிம்பிக் : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தம் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டி வரை வந்த வினேஷ் போகத் 100 கிராம் அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிகமாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இறுதிப்போட்டி வரை தான் வந்த நிலையில் அதற்காக தமக்கு பதக்கம் வழங்க வேண்டும் என வினேஷ் போகத் சுவிட்சர்லாந்தில் இயங்கும் விளையாட்டுத்துறைக்கான சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வினேஷ் போகத்துக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜராகி வாதாடினார். அப்போது வினேஷ் போகத் வேண்டுமென்றே எடையை அதிகரிக்கவில்லை என்றும், வீராங்கனைகள் போட்டிக்கு பின்பு உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போது எடை அதிகரித்து இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
மேலும் மல்யுத்த சம்மேளனத்தின் விதிகள் வீராங்கனைகளுக்கு எதிராக இருப்பதாகவும், அது வீரர்களின் உடல்நலத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால் அதனை மாற்றி வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கை அவசரமாக விசாரித்த தீர்ப்பாயம் இது குறித்து தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது. முதலில் ஆகஸ்ட் 11ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 9:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த தேசமே இதை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தீர்ப்பு மூன்றாவது முறையாக ஆகஸ்ட் 16ஆம் தேதி ஒத்திவைக்க ப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது. இது இந்திய தரப்பை கடுப்படைய செய்து இருக்கிறது. இருதரப்பையும் விசாரித்த பிறகு தீர்ப்பு வழங்குவதில் ஏன் தாமதம் செய்யப்படுகிறது? ஒருவேளை பதக்கம் கிடைக்கக் கூடாது என்பதற்காக ஏதேனும் வேலைகள் நடைபெறுகிறதா என்றும் ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் வினேஷ் போகத் பாரிசில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நாடு திரும்புகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications