சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டான் வாவ்ரிங்கா, குரோஷிய வீரர் போர்னா கோரிக்குடன் நடந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்ததாக கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் வாவ்ரிங்கா, போர்னாவை, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

நடப்புச் சாம்பியனான வாவ்ரிங்கா, முதல் செட்டின் முதல் 5 கேம்களையும் தொடர்ந்து வென்று போர்னாவை அயர வைத்தார்.
போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் வாவ்ரிங்கா பேசுகையில், ஒவ்வொரு வருடமும் புதுத் தொடர் போலவே நான் ஆடுவேன். இந்த முறை கூடுதல் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இன்று பந்தை முழுமையாக என்னால் கட்டுப்படுத்த முடிந்தது. அருமையான ஆட்டம் என்றார் அவர்.

நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான வாவ்ரிங்கா, தனக்கு சர்வீஸ்தான் மிகப் பெரிய பலம் என்றும் குறிப்பிட்டார்.

நேற்றைய போட்டியில் 4வது நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபின், லிதுவேனியாவின் ரிக்கார்டாஸ் பெரான்கியாஸை 6-0, 4-6, 7-6 (1) என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இவர் காலிறுதிப் போட்டியில் ஆண்டிரியஸ் ஹைதர் மாரரை சந்திப்பார்.