வடகிழக்கின் பாக்சிங் புயல்.. மேரி கோமிற்கு அடுத்து புது வரலாறு படைத்த லோவ்லினா.. யார் இந்த சாம்பியன்
டோக்கியோ: ஒலிம்பிக் 2020 பெண்கள் பாக்சிங் 69 கிலோ எடை பிரிவில் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது. காலிறுதி போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் லோவ்லினா போர்கோஹைன் இந்தியாவிற்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
2020 ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை பளு தூக்குதல் போட்டியில் மட்டுமே பதக்கம் பெற்றுள்ளது. மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மேரி கோம் நேற்று தோல்வி அடைந்து பாக்சிங் ஒலிம்பிக்கில் இருந்து நாக் அவுட் ஆனார்.
அதேபோல் இன்றும் பாக்சிங்கில் சிம்ரன்ஜித் தோல்வி அடைந்து 16வது சுற்று போட்டியிலேயே வெளியேறினார். இதனால் எங்கே பெண்கள் பாக்சிங்கில் இந்தியா தோல்வி அடைந்து விடுமோ என்று கருதப்பட்ட நிலையில் லோவ்லினா போர்கோஹைன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தகுதி
சீன தைபே வீராங்கனை சின் தைனை 4:1 என்ற கணக்கில் வீழ்த்தி லோவ்லினா வெற்றி பெற்றார். அரையிறுதி போட்டிக்கு லோவ்லினா தகுதி பெற்றதால் ஒரு பதக்கம் உறுதியானது. இனி இந்தியாவிற்கு குறைந்தது லோவ்லினா மூலம் ஒரு வெண்கல பதக்கமாவது கிடைக்கும் அல்லது அதிகபட்சம் தங்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சாதனை
அரையிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் மேரி கோமிற்கு பின் லோவ்லினா புதிய வரலாறு படைத்துள்ளார். இந்தியாவில் இருந்து பெண்கள் பாக்சிங்கில் பதக்கம் வெல்லும் இரண்டாவது பெண் என்ற சாதனையை லோவ்லினா படைத்துள்ளார். இன்னொரு பக்கம் ஆண்கள் பாக்ஸர் விஜேந்திர சிங்கை கணக்கில் எடுத்துக்கொண்டால் லோவ்லினாதான் இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் மூன்றாவது நபர்.

முதல் போட்டி
இந்த சாதனையை தனது முதல் போட்டியிலேயே லோவ்லினா போர்கோஹைன் நிகழ்த்தி உள்ளார். இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 2018, 2019 உலக பெண்கள் பாக்சிங்கில் வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் முதல்முறையாக ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வெறும் 23 வயதுதான் ஆகிறது. இதனால் இன்னும் பல வருடங்களுக்கு இவர் இந்தியாவிற்காக ஆட முடியும்.

கொரோனா
கடந்த வருடம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர் இந்தியாவிற்கான பயிற்சி ஆட்டங்களில் ஐரோப்பாவில் கலந்து கொள்ள முடியவில்லை. கடும் சிரமங்களுக்கு இடையே இந்தியாவில் இருந்தே பயிற்சி பெற்றவர் இந்த முறை இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.ஏற்கனவே சர்வதேச ஓபன் பாக்சிங் போட்டியில் இவர் தங்கம் பதக்கம் வென்றவர்.

இந்தியா
இந்தியாவிற்காக ஒலிம்பிக் பாக்சிங்கில் யாரும் தங்கம் வென்றது இல்லை என்ற வரலாற்றை முறியடிக்கும் வாய்ப்பு லோவ்லினாவிற்கு கிடைத்துள்ளது. மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர் லோவ்லினா. ஆனாலும் இருக்கிற வருமானத்தில் லோவ்லினா அப்பா அவரின் பாக்சிங் கனவை பின்பற்ற உத்வேகம் அளித்துள்ளார். லோவ்லினாவின் ட்வின் அக்காக்கள் லீமா, லிச்சா இரண்டு பேருமே பாக்ஸர்கள்.

வறுமை
ஆனால் வறுமை காரணமாக இவர்கள் பாக்சிங்கை தொடர முடியவில்லை. லோவ்லினா மட்டும் தொடர்ந்து பாக்சிங்கில் கலந்து கொண்டு கவனமாக ஆடி இருக்கிறார். பள்ளியில் நடந்த ஓபன் தேர்வு சுற்றில் கவனம் ஈர்த்து லோவ்லினா படிப்படியாக முன்னேறி தற்போது ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் உயரத்தை அடைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications