உலகக் கோப்பை கால்பந்து: உருகுவேயால் உருக்குலைக்கப்பட்ட இங்கிலாந்து!
சாவ் பாலோ: 20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் உருகுவே அணியிடம் 1-2 கோல்கணக்கில் இங்கிலாந்து வீழ்ந்தது.
பிரேசில் நாட்டில் 20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன. நேற்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தும் உருகுவேயும் மோதின.
உருகுவே அணி முதல் போட்டியில் கோஸ்டாரிகாவிடம் தோற்றிருந்தது. இங்கிலாந்து அணியோ இத்தாலியிடம் தோல்வியை எதிர்கொண்டது. இதனால் 2 அணிகளுமே அடுத்த சுற்று வாய்ப்புக்காக வாழ்வா சாவா என்ற போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் மோதின.

ரூனி- ஸ்வாரஸ்
ஆட்டம் தொடங்கிய முதல் இரண்டு அணி வீரர்களும் உக்கிரமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தனர். ஒட்டுமொத்த ஆட்டமுமே இங்கிலாந்தின் வெய்ன் ரூனி- உருகுவேயின் லூயிஸ் ஸ்வாரஸ் பக்கமே இருந்து வந்தது.

ஸ்வராஸின் தல கோல்
இந்த பரபரப்பான நிலையில் 39வது நிமிடத்தில் உருகுவேயின் ஸ்வராஸ் தலையால் முட்டி கோலடிக்க ஆடுகளம் பரபரப்பானது. இதனால் எப்படியும் கோல் அடித்தாக வேண்டிய நிலையில் இங்கிலாந்து போராடத் தொடங்கியது.

ஜோ ஹர்ட் அற்புதம்
மேலும் 49-வது நிமிடத்தில் உருகுவே அடித்த கோலை இங்கிலாந்து கோல் கீப்பர் ஜோ ஹர்ட் அற்புதமாக தடுத்து அசத்தினார். அதே நேரத்தில் இங்கிலாந்து கோல் போடுவதற்கு பெரும் பிரயத்தனப்பட்டது.

முதல் கோலடித்த ரூனி
ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் கிளைன் ஜான்சன் தட்டிவிட்ட பந்தை ரூனி கோலாக மாற்றி இங்கிலாந்தின் முகத்தில் நம்பிக்கை வெளிப்பட்டது. ஆட்டம் சமநிலையில் நிற்க இரு அணிகளும் அடுத்த கோலுக்காக மும்முரமாக மோதின.

மீண்டும் கோலடித்த ஸ்வராஸ்
85-வது நிமிடத்தில் உருகுவேயின் ஸ்வாரஸ் அதிரடியாக 2-வது கோலை அற்புதமாக அடிக்க இங்கிலாந்து நொறுங்கிப் போனது.

தோற்றது இங்கிலாந்து
ஆட்ட நேர முடிவில் உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் வெல்ல இங்கிலாந்து தாம் எதிர்கொண்ட 2 போட்டிகளிலுமே பரிதாப தோல்வியைத் தழுவியது.


Click it and Unblock the Notifications