ரியாத்: WWE போட்டிகள் நம் பார்க்கும் தொலைக்காட்சி தொடர் போல் தான் என்பது தெரிந்தாலும், அதில் இருக்கும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும், மசாலா அம்சங்களுக்காகவும் சில நேரம் கிளுகிளுப்புகளுக்காகவும் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். மல்யுத்த போட்டிகளை வைத்து கதை சொல்ல முடியும் என்று ரசிகர்களை நம்ப வைத்து அதை ஒரு வெற்றிகரமான விளையாட்டாகவே மாற்றப்பட்டிருக்கிறது.
தற்போது டபிள்யூ டபிள்யூ இ மதிப்பு பல்லாயிரம் கோடியை தாண்டி இருக்கும். முன்பெல்லாம் இந்தியாவில் போட்டிகள் டென் ஸ்போர்ட்ஸ் அல்லது சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில் பார்க்க முடியும். ஆனால் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தற்போது டபிள்யூ டபிள்யூ இ போட்டிகள் இந்தியாவில் நெட்பிளிக்சில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த சூழலில் டபிள்யூ டபிள்யூ இ போட்டிகள் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் அளவு ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டது. இதனை பயன்படுத்தி சவுதி அரேபியாவில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் விதமாக 2017 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் பத்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரண்டு பெரிய தொடர்களை சவூதி அரேபியாவில் நடத்த வேண்டும் என அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சகம் ஒரு ஒப்பந்தத்தை போட்டது.
இதன் மூலம் சவுதி அரேபியா மேல் இருக்கும் தவறான இமேஜை அடித்து நொறுக்குவது மட்டும் அல்லாமல் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் என சவுதி அரசு நம்பியது. மேலும் விளையாட்டின் மூலம் இரு நாட்டு வெவ்வேறு கலாச்சாரத்தை சங்கமிக்க செய்ய முடியும் என்பதே இதன் நோக்கமாக இருக்கிறது.
டபிள்யூ டபிள்யூ இ போட்டிகள் 2014 ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் நடைபெற்றாலும் அது எல்லாம் சாதாரண தொடராக தான் நடத்தப்பட்டது. 2017 முதல் தான் பெரிய தொடர்களை இங்கு நடத்தி வருகிறது. இந்த சூழலில் டபிள்யூ டபிள்யூ இ போட்டியில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் மல்யுத்தத்தில் ஈடுபடுவார்கள். பெண்கள் சண்டை போடுவதற்கு ஏதுவாக தங்களுடைய உடைகளை அணிந்திருப்பார்கள்.
இது சில நேரம் கவர்ச்சியாக தோன்றும். இது பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த தொடர் என்பதால் கவர்ச்சியை மையமாக வைத்து அவர்களின் ஆடைகளும் அமைக்கப்பட்டிருக்கும. இதன் காரணமாக முதல் சில ஆண்டுகள் wwe தொடரில் பெண்கள் சவுதி அரேபியாவில் போட்டி போட தடை இருந்தது.
ஆனால் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த தடை நீக்கப்பட்டது. இதற்கு காரணம் பெண்கள் தங்களது உடலை முழுமையாக மூடிக் கொண்டு சண்டையிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதை டபிள்யூ டபிள்யூ இ பின்பற்றியதன் மூலம் தற்போது மகளிர் மல்யுத்த போட்டிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது நடைபெற்றிருக்கும் நைட் ஆப் தி சாம்பியன் தொடரிலும் பெண்கள் கழுத்து முதல் கால் வரை உடைகளால் மூடி வருகின்றனர்.
ஆனால் ஆண்களுக்கு இப்படி எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், மறு தரப்பினர் அந்த நாட்டு கலாச்சாரத்தை மதிக்கும் விதமாக தான் இப்படி போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் எந்த தவறும் இல்லை என்றும் பாராட்டி உள்ளனர். மேலும் பெண்களுக்கும் மேடை ஏற வாய்ப்பு வழங்கியதற்கு சவுதி அரசை பாராட்ட வேண்டும் என்றும் பலரும் தெரிவித்திருந்தனர்.
இந்த சூழலில் sami zayn என்ற கனடாவை சேர்ந்த டபிள்யூ டபிள்யூ இ வீரர். சீரியா வம்சாவளியை சேர்ந்த இவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். சவுதி அரேபியாவில் போட்டி போட வந்த அவர் பாலஸ்தீன் கொடி நிறத்தை தனது பேண்டில் அணிந்தவாறு போட்டி போட்டதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் அரபிய நாடுகளில் நடத்தப்படுவதன் மூலம் இரு வெவ்வேறு கலாச்சாரத்தை கொண்ட உலகமும் ஒன்றிணை சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.