WWE- பாலியல் புகாருக்குள்ளானவருடன் ஊர் சுற்றிய The Undertaker.. "Vince McMahon என் அப்பா போன்றவர்"
மும்பை : Wwe எனப்படும் பிரபல மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனத்தை நிறுவியவர் வின்ஸ் மிக்மேன். அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபரான இவர், பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துக்களை உடையவர். சாதாரண ஒரு சர்க்கஸ் கூடாரம் போல் ஆரம்பிக்கப்பட்ட மல்யுத்த போட்டிகளை, இன்று உலகம் முழுவதும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு மெகா சீரியல் போல் கொண்டு சேர்த்தவர்.
இன்று wwe-யில் கொடிகட்டி பறக்கும் பல சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியவர். இவர் மீது பல பாலியல் புகார்கள் வந்து குவிந்தது. இதற்கான வழக்கு நடத்தப்பட்டு வந்தது. தம் மீதான வழக்கில் புகார் அளித்தவருடன் சுமூகமாக சென்றதை அடுத்து வழக்கு முடிக்கப்பட்டதாக வின்ஸ் மிக்மேன் அறிவித்தார்.

இதை அடுத்து சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வின்ஸ் மிக்மேன், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அண்மையில் நடைபெற்ற சூப்பர் பவுல் விளையாட்டு நிகழ்ச்சியில், வின்ஸ் மிக்மேன் குடும்பத்தினருடன் அண்டர்டேக்கரும் இருந்தார். இதுதான் தற்போது சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலியல் குற்றவாளி என புகார் சுமத்தப்படும் வின்ஸ் மிக்மேனுடன் அண்டர்டேக்கர் ஊர் சுற்றுவது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில் இதற்கு அண்டர்டேக்கர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் ஒரு விருந்தாளியாக சென்று இருந்தேன். இதற்காக என் மீது பலரும் கோபப்படுவார்கள் என்று எனக்கு தெரியும்.
பலரும், எப்படி பெண்களிடம் அவர் நடந்து கொண்டார் என்று உங்களுக்கு தெரியாதா? என்று கேள்வி கேட்கிறார்கள். ஆனால் அது பற்றி உண்மையில் எனக்கு தெரியாது. நான் அவரிடம் அது பற்றி எல்லாம் பேசியது கிடையாது. அவர் என்னுடைய நல்ல நண்பன். இன்று என் வாழ்நாளில் நான் ஏதேனும் சாதித்து ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கிறேன் என்றால் அதற்கு வின்ஸ் மிக்மேன் கொடுத்த வாய்ப்பு தான் காரணம்.
என் வாழ்க்கையை கட்டமைத்தவர் அவர். ஆரம்ப காலத்தில் நாங்கள் நண்பராக தான் இருந்தோம். அதன் பிறகு என்னுடைய தந்தை காலமானார். அதிலிருந்து இன்று வரை வின்ஸ் மிக்மேன் என்னுடைய தந்தை போல் தான் இருந்து வருகிறார். அவர் எனக்கு ஒரு சகோதரன். ஒரு குரு. எல்லாமே அவர்தான். பாலியல் வழக்கில் என்ன நடந்தது என்று எல்லாம் எனக்கு தெரியாது.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி கிடையாது நான். இங்கு யாரும் யாரையும் எடை போட முடியாது. மேலே இருக்கும் ஒருவர் தான் அதையெல்லாம் பார்க்க வேண்டும். நமக்கு என்ன இறுதியில் கிடைக்கப் போகிறது என்பதை மேலே உள்ளவன் தான் கூறுவான். இது தான் உண்மை. இதனால் கண்ணாடி மாளிகையில் இருக்கும் நபர்கள், வேறு யாரை பார்த்து கல் எறிய கூடாது மக்கள் சொல்வதை எல்லாம் என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நீங்கள் குறை சொல்வதால் ஒருவர் மீது நான் வைத்திருக்கும் அன்பை எப்படி மாற்ற முடியும் என்று அண்டர்டேக்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications