செஸ் போட்டியில் இந்தியாவை உச்சத்துக்கு கொண்டு சென்ற 2024ஆம் ஆண்டு.. செஸ் ஒலிம்பியாட்டில் சாதனை
ஹங்கேரி : செஸ் விளையாட்டில் இந்திய அணி உலக அளவில் முடிசூடா மன்னனாக விளங்கியது இந்த 2024 ஆம் ஆண்டு தான். முதல் முறையாக கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்றது எவ்வளவு பெரிய சாதனையோ அதேபோல் ஒரு மகத்தான சாதனையை செஸ் விளையாட்டில் இந்திய அணி 2024 ஆம் ஆண்டு படைத்தது.
வரலாற்றில் இந்திய செஸ் பற்றி படிக்க வேண்டும் என்றால் 2024 ஆம் ஆண்டு தங்கத்தால் பொறிக்கப்பட வேண்டியவை. 2024 ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை இந்திய வீரர் குகேஷ் கைப்பற்றினார்.

2024 ஆம் ஆண்டு இறுதியில் சர்ப்ரைஸ் கிப்டாக உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி பட்டம் வென்றார். இப்படி தனிப்பட்ட வீரர்கள் மட்டும் சாதிக்காமல் 2024 ஆம் ஆண்டில் இந்திய அணி ஒரு குழுவாக சாதித்தது. செஸ் போட்டியின் ஒலிம்பிக் தொடர் என போற்றப்படும் செஸ் ஒலிம்பியாட் 2022ஆம் ஆண்டு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதனால் செஸ் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எகிறியது. இதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு ஹங்கேரியில் உள்ள புத்தபெஸ்ட் நகரில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இதில் ஓபன் பிரிவில் 975 பேரும், மகளிர் பிரிவில் 909 பேரும் பங்கேற்றனர். சுமார் 195 நாடுகளில் இருந்து 197 அணிகள் ஓபன் பிரிவிலும் மகளிர் பிரிவில் 181 நாடுகளில் இருந்து 183 அணிகளும் பங்கு பெற்றன.
இந்த தொடரில் மொத்தம் 11 சுற்றுகள் நடைபெற்றது. செப்டம்பர் பத்தாம் தேதி முதல் செப்டம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தமாக 1884 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஓபன் பிரிவில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் ஏர்காசி, வித்யூட், ஹரி கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
இதேபோன்று மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஹரிக்கா, வைஷாலி, திவ்யா, வாண்டிக்கா, டானியா ஆகியோர் அடங்கிய குழு மகளிர் குழுவில் தங்க பதக்கம் வென்றது. இதன் மூலம் இரு பிரிவிலுமே தங்கம் வென்று இந்தியா சாதனை படைத்தது. 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரே நாடு இரு பிரிவிலும் தங்கம் வென்றது முதன் முறையாகும். ஒட்டுமொத்தமாக ரஷ்யா,சீனாவுக்கு பிறகு இந்த சாதனையை இந்திய அணி நிகழ்த்தியது.
ஓபன் பிரிவில் மொத்தமாக கிடைக்க வேண்டிய 22 புள்ளிகளில் 21 புள்ளிகளை இந்தியா பெற்றது. இது உச்சபட்ச ரெகார்ட் ஆகும். ஓபன் பிரிவில் அமெரிக்கா வெள்ளி பதக்கத்தையும், உஸ்பெகிஸ்தான் வெண்கல பதக்கத்தையும் வென்றது. முதலிடத்தில் உள்ள இந்தியாவுக்கும், இரண்டாவது இடத்தில் இருந்த அமெரிக்க அணிக்கும் நான்கு புள்ளிகள் வித்தியாசம் இருந்தது. இப்படி செஸ் போட்டியில் ஒட்டுமொத்தமாகவே இந்தியாவுக்கு ஏற்றம் தந்த ஆண்டாக 2024 அமைந்தது.


Click it and Unblock the Notifications