டெல்லி: 2024 ஒலிம்பிக் தொடரில் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவின் செயல்பாடு ஏமாற்றமாகவே இருந்தது. இந்த முறை இந்தியா ஒரு தங்கப் பதக்கத்தை கூட வெல்லவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த பல வீராங்கனைகள் பதக்கம் வெல்லாமல் ஏமாற்றத்தை அளித்தனர்.
இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஒரு பதக்கத்தை உறுதி செய்து இருந்த வினேஷ் போகாட் 100 கிராம் கூடுதல் எடையால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றார்.

துப்பாக்கி சுடுதலில் மூன்று வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. ஹாக்கியில் ஒரு வெண்கலப் பதக்கமும், மல்யுத்தத்தில் ஒரு வெண்கலப் பதக்கமும் மட்டுமே இந்தியாவுக்கு கிடைத்தன. ஒரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்கள் மட்டுமே இந்தியாவுக்கு கிடைத்தன. இந்த நிலையில் ஏமாற்றத்தை அளித்த சில விளையாட்டுகளை பற்றி இங்கே பார்க்கலாம்.
பேட்மின்டனில் இந்தியா நிச்சயம் இரண்டு பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மகளிர் பிரிவில் பிவி சிந்து முதல் சுற்றுடன் வெளியேறினார். அவர் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் ஆவார். அடுத்து ஆடவர் ஒற்றையர் பிரிவில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த லக்ஷயா சென் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோல்வி அடைந்தார்.
சாத்விக்சிராஜ் மற்றும் சிராக் செட்டி ஆடவர் இரட்டையர் பிரிவில் உலகின் முன்னணி வீரர்களாக இருந்த நிலையில் ஒலிம்பிக்கில் ஏமாற்றம் அளித்தனர். குத்துச்சண்டை மகளிர் பிரிவில் நிக்காத் ஜரீன் 0 - 5 என சீன வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.
அதுபோல பளு தூக்குதலில் பலமுறை உலக சாம்பியன் ஆக பட்டம் வென்றிருந்த மீராபாய் சானுவும் ஏமாற்றம் அளித்தார். தடகளத்திலும் இந்திய அணி ஒரு பதக்கத்தையும் வெல்லவில்லை. டேபிள் டென்னிஸில் இந்திய வீரர்கள் படுமோசமான தோல்விகளை சந்தித்தனர். ஒருவர் கூட இரண்டாவது சுற்றை தாண்டவில்லை.
சில வெண்கலப் பதக்கங்கள் வெள்ளியாக கிடைத்திருக்க கூடும். ஆனால், அந்த வாய்ப்புகளும் நூலிழையில் தவறிப் போனது. ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது. நிச்சயம் இறுதிப்போட்டி வரை முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஹாக்கி அணியால் வெண்கலப் பதக்கத்தை மட்டுமே வெல்ல முடிந்தது.
அதுபோல மனு பாக்கர் மகளிர் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலத்தை வென்றார். ஆனால், அவர் இரண்டு முறையும் வெள்ளிப் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு இருந்தது. இப்படியாக 2024 ஒலிம்பிக் தொடர் இந்தியாவுக்கு சற்று மோசமான அனுபவமாகவே இருந்தது.