கனவை எட்டிய மனு பாக்கர்.. 2வது பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா.. ஒலிம்பிக் அரங்கில் சாதித்த இந்தியர்கள்
பாரிஸ்: பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இந்தியா இம்முறை ஒரு வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 6 பதக்கங்களை வென்று 71வது இடத்தில் நிறைவு செய்தது. ஈட்டி எறிதல், மல்யுத்தம், துப்பாக்கிச் சுடுதல் மற்றும் ஹாக்கி ஆகிய 4 விளையாட்டுகளில் இந்தியா சார்பாக 6 பதக்கங்களை கைப்பற்றப்பட்டது. இந்திய அணிக்காக யார் யார் பதக்கம் வென்றார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
நடப்பாண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பாக 16 விளையாட்டு போட்டிகளில் 117 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் மொத்தமாக 13 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் மொத்தமாக 6 வீரர்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்றனர். அதில் முதல் பதக்கமாக மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கம் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் மானு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் இருவரும் வெண்கலம் வென்று அசத்தினர். அதேபோல் துப்பாக்கிச் சுடுதலில் 50 மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.
இதன்பின் 2020 ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா, இம்முறை வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இறுதிப்போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கத்தை கைப்பற்ற, நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார். இது அவரின் 2வது ஒலிம்பிக் பதக்கமாகும்.
தொடர்ந்து மல்யுத்தத்தில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மல்யுத்த விளையாட்டில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையையும் அமன் ஷெராவத் பெற்றார். இறுதியாக இந்திய ஹாக்கி அணி ஸ்பெய்ன் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை புரிந்தது.


Click it and Unblock the Notifications