மும்பை: மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்கின்றன. சரியாக 8.46 மணிக்கு நேற்றைய தினம் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து ஒரு தேர்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க தனது சொந்த ஊரான பாராமதிக்கு துணை முதல்வர் அஜித் பவார் விமானத்தில் நேற்று காலை 8.10 மணிக்கு புறப்பட்டார்.

அவருடன் ஒரு விமானி, பாதுகாவலர், உதவியாளர் இருவர் என 5 பேர் அந்த விமானத்தில் இருந்தனர். அப்போது சரியாக 8.46 மணிக்கு விமானத்தில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் விமானி, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்போது விமானத்தை தரையிறக்க முயற்சித்த போதும் அது முடியாததால் Go around எனப்படும் மீண்டும் மேலே எழும்பி வட்டமடித்து மீண்டும் தரையிறங்கும் முயற்சி நடந்தது.
அப்போது அந்த விமானியால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை. இந்த நிலையில் விமானியிடம், ஏடிசி அதிகாரிகள் பாராமதி ஓடுதளம் தெரிகிறதா என கேட்டனராம். அதற்கு அவர் முதலில் தெரியவில்லை என்றும் பின்னர் தெரிவதாகவும் கூறினாராம்.
இந்த நிலையில் அவர் விமானத்தை தரையிறக்க முயற்சித்த போது திடீரென ஓடுதளத்தில் விமானம் மோதியதில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. இதனால் தீ விமானம் முழுவதும் பரவி அதில் பயணித்த அஜித் பவார் உள்ளிட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் அவர்களின் உடல்களை அடையாளம் காட்டுவதில் கூட சிக்கல் எழுந்துள்ளது. எனினும் அஜித் பவாரின் கை கடிகாரத்தை வைத்து அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.
அவரது உடலுக்கு இன்று இறுதி சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இந்த விமான விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விமான புலனாய்வுத் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அவர் பயணித்த லியர்ஜெட் 45 விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்து நெடுஞ்சாலையில் இருந்த ஒரு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.
அஜித் பவார், மேலும் 4 பேருடன் புறப்பட்ட அந்த விமானம், சரியாக 8.46 மணிக்கு தரையிறங்க முடியாமல் தவித்து கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த சம்பவம் குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தை நேரில் பார்த்த ஒரு பெண் கூறுகையில், "விமானம் பாராமதி ஓடுதளத்தில் தரையிறங்கும் போது 2, 3 முறை தடுமாறியது. விமானம் மீண்டும் மேலே பறந்தது. இதையடுத்து மீண்டும் தரையிறங்கிய போது ஓடுதள தரையில் மோதி தீப்பிடித்தது. அப்போது 3 முறை வெடி சப்தமும் கேட்டது" என அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்த விமான விபத்திற்கு என்ன காரணம் என்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் "விமான விபத்தில் எந்த சதியும் இல்லை, எனவே யாரும் அஜித் பவார் விமான விபத்தை அரசியலாக்க வேண்டாம்" என அஜித் பவாரின் சித்தப்பா சரத் பவார் கேட்டுக் கொண்டுள்ளார்.
Credit: Oneindia