வாஷிங்டன்: கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா தலைமையில் இருநாடுகள் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் தான்‛‛உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் ஒரு வாரம் வரை தாக்குதலை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் கேட்டேன். அவரும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளார்'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்த போர் இன்னும் சில வாரங்களில் 4வது ஆண்டை எட்ட உள்ளது. அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்த முயன்று வருகிறார். இருதரப்பிடமும் பேசி வருகிறார். ஆனால் போர் இன்னும் நிறுத்தப்படவில்லை.

இந்நிலையில் தான் அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு அதிபர் டொனால் டிரம்ப் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‛‛ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தனிப்பட்ட முறையில் கீவ் (உக்ரைன் தலைநகர்) மற்றும் பிற இடங்களில் தாக்குதல்களை ஒரு வாரம் வரை நிறுத்த வேண்டும். ஏனென்றால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது என்று கூறினேன். இதனை புதின் ஏற்றுள்ளார். நான் அவரிடம் (புதின்) பேச வேண்டாம். அப்படி பேசுவது எந்த பயனையும் தராது என்றனர். ஆனால் அப்படி நடக்கவில்லை. அவர் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டார்'' என்றார்.
இது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்துவதற்கான முதல் படி என்று நம்பப்படுகிறது. ஏனென்றால், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் நேரடியாகவும், தொலைபேசியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரிடம் டொனால்ட் டிரம்ப் பலமுறை பேசி உள்ளார். ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை.
சமீபத்தில் கூட அபுதாபியில் வைத்து முதல் முறையாக ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய முதல் முறையாக போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் சார்பில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். அப்போது இருதரப்புக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இருப்பினும் இந்த விவகாரத்தில் இருநாடுகளின் பிரதிநிதிகளும் நடத்திய முதல் பேச்சுவார்த்தை அதுவாகும்.
இதனால் அது பாசிட்டிவாக பார்க்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா வரும்படி விளாடிமிர் ஜெலன்ஸ்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, இருநாடுகளும் தங்களின் மின்சாரம் உள்பட பிற எனர்ஜி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியாக இருநாடுகளுக்கு இடையே நடக்கும் விஷயங்கள் ஓரளவு ஆறுதல் தரும் வகையில் உள்ளது. இந்நிலையில் தான், கடும் குளிரால் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல இடங்களில் தாக்குதல்களை ஒரு வாரம் வரை நிறுத்த புதின் ஒப்புக்கொண்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
Credit: Oneindia