சென்னை: "விஜய் பூஜ்ஜியம் மாதிரி. பூஜ்ஜியம் தனியாக இருந்தால் மதிப்பு இல்லை. பூஜ்ஜியத்திற்கு முன்னால் எண் சேர்ந்தால் தான் மதிப்பு கிடைக்கும். 2026ல் என்.டி.ஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விஜய் நிம்மதியாக அரசியல் செய்யலாம். ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை நினைவில் வைக்க வேண்டும்." என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் அமைந்துள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் கலந்து கொண்டார்.

அதன்பிறகு தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "அரசியலில் அனுபவம் என்பது மிகவும் முக்கியமானது. நானும், அண்ணாமலையும் உச்சபட்ச பதவிகளை வகித்துவிட்டு அரசியலுக்கு வந்தவர்கள். அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்து அரசியலுக்கு வந்தது போல, பலர் உயர்ந்த பதவிகளை விட்டே மக்கள் சேவைக்காக அரசியலில் களமிறங்கியுள்ளனர்.
விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை. அனுபவமில்லாமல் நேரடியாக அரசியலில் குதிப்பது வெற்றியை உறுதி செய்யாது. அனுபவம் இல்லாத ஒருவருடன் கூட்டணி அமைக்க யாரும் விரும்பமாட்டார்கள். விஜய் பூஜ்ஜியம் மாதிரி. பூஜ்ஜியம் தனியாக இருந்தால் மதிப்பு ல்லை. பூஜ்ஜியத்திற்கு முன்னால் எண் சேர்ந்தால் தான் மதிப்பு கிடைக்கும் என்பதுபோல், அனுபவம் இருந்தால் மட்டுமே அரசியலில் ஒரு நபருக்கு மதிப்பு உருவாகும்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சினிமாவிலும் அரசியலிலும் ஒரே நேரத்தில் பயணித்தவர். அதனால் தான் அவர் அரசியலில் வெற்றி பெற முடிந்தது. ஆனால், திரைப்படத்துறையில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்து உடனடியாக வெற்றி பெறுவது எளிதான விஷயம் அல்ல. எனவே நடிகர் விஜய் தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் ஏமாற்றும் வகையில் அவசர முடிவுகளை எடுக்கக்கூடாது.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விஜய் நிம்மதியாக அரசியலில் தொடரலாம். அதுவே அவருக்கு பாதுகாப்பான பாதையாக இருக்கும். ஒருவேளை திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கரூர் சம்பவத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அரசியல் என்பது தனிநபர் முயற்சியால் மட்டும் வெற்றி பெறும் தளம் அல்ல. வெற்றி பெறக்கூடிய கூட்டணியுடன் இணைந்து பயணிப்பதே புத்திசாலித்தனம்.
விஜய்க்கு அனுபவம் போதாது, தனித்து விடப்பட்டதால் அதிமுக சரண் அடைந்ததாக பேசுகிறாரா எனத் தெரியவில்லை. விஜய் பேசுவதால் என்.டி.ஏ குறைந்துபோய்விடாது. திமுக மற்றும் என்.டி. கூட்டணி இடையேதான் போட்டி உள்ளது. வெற்றி பெறும் அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் மறைமுகமாக அழைப்பு விடுத்தார்.
Credit: Oneindia