ஒரு நியாய, தர்மம் வேணாமா? விடியக்காலை மூணு மணிக்கா மேட்சை முடிப்பீங்க?.. கதறி அழுத ஆண்டி முர்ரே
வாஷிங்டன் : மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஆண்டி முர்ரே, சிட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு தகுதி பெற்றும், தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
தனது காயத்தால், நீண்ட கால ஓய்வில் இருந்து மீண்டும் களத்தில் குதித்திருக்கும் முர்ரே, தன் உடல் சோர்வின் காரணமாக இந்த விலகல் முடிவை அறிவித்துள்ளார்.
நேற்று ஆண்டி முர்ரே ஆடிய போட்டி விடியற்காலை மூன்று மணிக்குதான் முடிந்தது. இது போல போட்டிகள் நடத்துவது நியாமற்றது என கூறியுள்ளார் முர்ரே. அந்த போட்டி முடிந்த பின், வெற்றி பெற்றாலும் கதறி அழுதார் ஆண்டி முர்ரே.

நீண்ட ஒய்வுக்கு பின்
இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு 11 மாதங்கள் ஓய்வில் இருந்த ஆண்டி முர்ரே, கடந்த ஜூன் மாதம் முதல் டென்னிஸ் போட்டிகளில் மீண்டும் களத்தில் குதித்துள்ளார். தற்போது வாஷிங்டனில் நடந்து வரும் சிட்டி ஓபன் தொடரில் பங்கேற்று ஆடி வந்தார்.

வெற்றி பெற்றாலும், வீழ்த்திய சோர்வு
இந்த தொடரின் மூன்றாவது சுற்றில், ரோமானியாவின் மேரியஸ் கோபில்-ஐ சந்தித்தார். இரவு நேரத்தில் தொடங்கிய இந்த போட்டி, நீண்ட நேரம் நடந்தது. விடியற்காலை மூன்று மணிக்கு ஆண்டி முர்ரேவின் வெற்றியோடு முடிவுக்கு வந்தது. வெற்றி பெற்றாலும், தன் நீண்ட நேர களப்போராட்டத்தாலும், உடல் சோர்வாலும் கீழே விழுந்து கதறி அழுதுவிட்டார் முர்ரே.

3 மணி வரை போட்டி நடத்துவது நியாயமா?
போட்டிக்கு பின் பேசிய அவர், இது போல இரவு ஆரம்பித்து விடியற்காலை வரை போட்டிகள் நடத்துவது நிகழ்ச்சியாளர்கள், வீரர்கள், பார்வையாளர்கள், தொலைகாட்சிகள் என யாருக்கும் நல்லதல்ல என தெரிவித்தார். இது போன்ற போட்டிகளுக்கு பின் நாளை மீண்டும், வீரர்கள் களத்தில் போட்டியிட வேண்டும் என நினைப்பது நியாமற்றது எனவும் தெரிவித்தார்.

2 தொடர்களில் இருந்து விலகல்
இதையடுத்து, நேற்று சிட்டி ஓபன் தொடரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆண்டி முர்ரே தனக்கு ஒய்வு தேவைப்படுவதாலும், சோர்வில் இருந்து மீளவும் தான் சிட்டி ஓபன் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் நடைபெற உள்ள, டொரோண்டோ மாஸ்டர்ஸ் தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார், ஆண்டி முர்ரே.


Click it and Unblock the Notifications