Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய டென்னிஸ் வீரர்கள் நீக்கம்.. விளையாட்டு அமைச்சகம் விளக்கம்

டெல்லி: வரும் செப்டம்பர் 19 அன்று ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் தொடங்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணியில் இருந்து நாட்டின் முன்னணி வீராங்கனைகளான சஹாஜா யமலாபல்லி, வைஷ்ணவி அட்கர், முன்னணி வீரர் சுமித் நாகல் உட்பட 5 வீரர்கள் நீக்கப்பட்டதற்கான விரிவான காரணங்களை மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் தற்போது வெளியிட்டுள்ளன. அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) பரிந்துரைத்த 12 பேர் கொண்ட ஆரம்பப் பட்டியலில் இந்த 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால், அவர்கள் ஐவரும் இறுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது இந்திய டென்னிஸ் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

மத்திய விளையாட்டு அமைச்சகம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுக்கவில்லை என்றும், தற்போதைய பதக்க வாய்ப்புகளின் அடிப்படையிலான மதிப்பீட்டின்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

Asian Games 2026 Sports Ministry Explains Why 5 Indian Tennis Players Were Dropped From Squad

சர்ச்சையின் பின்னணி

ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக ஏஐடிஏ 12 பேர் கொண்ட பட்டியலை வழங்கியிருந்தது. ஆனால், இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) விளையாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பிய இறுதிப் பட்டியலில் வெறும் 7 டென்னிஸ் வீரர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். இதனால் சுமித் நாகல், சஹாஜா யமலாபல்லி, வைஷ்ணவி அட்கர், வைதேஹி சவுத்ரி, மனஸ் தாம்னே மற்றும் பிரார்தனா தாம்பரே ஆகிய 5 வீரர்கள் இறுதி அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நீக்கத்திற்கு இந்தியாவின் முன்னாள் நம்பர் 1 இரட்டையர் ஆட்டக்காரரான ரோஹன் போபண்ணா கடும் கண்டனம் தெரிவித்தார். வீரர்கள் மைதானத்தில் தங்களது திறமையை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டுமே தவிர, முன்கூட்டியே அவர்களின் வாய்ப்புகளை முடிவு செய்யக் கூடாது என்று அவர் வாதிட்டார். ஆனால், தற்போதைய செயல்பாடுகளின் அடிப்படையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு இல்லாத வீரர்களுக்கு அனுபவம் வழங்குவதற்கான ஒரு 'சுற்றுலா பயணமாக' ஆசிய விளையாட்டுப் போட்டியைப் பயன்படுத்த முடியாது என்று விளையாட்டு அமைச்சகம் உறுதியாக கூறி உள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஆசிய அளவில் ஒரு குறிப்பிட்ட தகுதியை எட்டியிருக்க வேண்டும் என்று அமைச்சகம் நிபந்தனை விதித்துள்ளது. தனிநபர் பிரிவைப் பொறுத்தவரை, கடந்த 12 மாதங்களில் ஒற்றையர் ஆட்டத்தில் ஆசிய அளவில் முதல் 6 இடங்களுக்குள்ளும், இரட்டையர் ஆட்டத்தில் ஆசிய அளவில் முதல் 8 இடங்களுக்குள்ளும் வீரர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், நீக்கப்பட்ட இந்த 5 வீரர்களும் இந்த அடிப்படைத் தகுதியை நிறைவு செய்யவில்லை என்று அமைச்சக வட்டாரங்கள் விளக்கியுள்ளன.

தரவரிசையில் இருக்கும் பெரும் இடைவெளி

இந்திய டென்னிஸ் வீரர்களின் தற்போதைய சர்வதேச தரவரிசைக்கும், ஆசியாவின் முன்னணி வீரர்களின் தரவரிசைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆசிய அளவில் 6 வது இடத்தில் இருக்கும் வீரரின் சர்வதேச தரவரிசை 120 ஆக உள்ளது. ஆனால் இந்திய இளம் வீரர் மனஸ் தாம்னே சர்வதேச அளவில் 372 வது இடத்தில் உள்ளார். ஆசிய அளவில் 16 வது இடத்தில் இருக்கும் வீரரே 227 வது தரவரிசையில் இருக்கும் போது, தாம்னேவின் தற்போதைய தரவரிசை மிகவும் பின்தங்கியுள்ளது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆசிய அளவில் 6 வது இடத்தில் இருக்கும் வீராங்கனையின் சர்வதேச தரவரிசை 72 ஆக உள்ளது. ஆனால், இந்தியாவின் நம்பர் 1 ஒற்றையர் வீராங்கனையான சஹாஜா யமலாபல்லி சர்வதேச அளவில் 344 வது இடத்திலும், வைஷ்ணவி 390 வது இடத்திலும், வைதேஹி 437 வது இடத்திலும் உள்ளனர். ஆசிய அளவில் 16 வது இடத்தில் இருக்கும் வீராங்கனையின் தரவரிசையே 121 ஆக இருக்கும் போது, இந்திய வீராங்கனைகள் 300 வது தரவரிசைக்கு வெளியே உள்ளனர். இதனால் இந்திய அளவில் அவர்கள் முதலிடத்தில் இருந்தாலும், ஆசிய அளவில் பதக்கம் வெல்வதற்கான தகுதி அவர்களுக்குத் தற்போதைக்கு இல்லை என்று அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இரட்டையர் பிரிவின் நிலை என்ன?

இதே தரவரிசை விதிமுறை தான் பெண்கள் இரட்டையர் பிரிவிற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆசிய அளவில் 8 வது இடத்தில் இருக்கும் பெண்கள் இரட்டையர் வீராங்கனையின் தரவரிசை 30 ஆக உள்ளது. ஆனால், இந்தியாவின் வைதேஹி 426 வது இடத்திலும், பிரார்தனா 267 வது இடத்திலும் உள்ளனர். மேலும், இந்த வைதேஹி - பிரார்தனா ஜோடி சர்வதேச டபிள்யூடிஏ அல்லது ஐடிஎஃப் தொடர்களில் சமீபகாலமாக இணைந்து விளையாடவில்லை என்பதும் அவர்களின் பதக்க வாய்ப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

விதிவிலக்கு அளிக்க மறுப்பது ஏன்?

டென்னிஸ் விளையாட்டிற்கு மட்டும் தேர்வு விதிகளில் விலக்கு அளித்தால், அது மற்ற விளையாட்டுகளின் தேர்வை பாதிக்கும் என்று அமைச்சகம் கூறி உள்ளது. சுமார் 35 க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பிரிவுகளில் இருந்து 492 வீரர்களை அமைச்சகம் அனுமதித்துள்ளது. மற்ற விளையாட்டுகளில் ஆசிய அளவில் 9 வது இடத்தில் இருக்கும் வீரர் தகுதி பெறாத போது, டென்னிஸ் வீரர்களுக்கு மட்டும் சலுகை வழங்க முடியாது என்பதில் அமைச்சகம் உறுதியாக உள்ளது.

இந்த 5 வீரர்கள் நீக்கப்பட்டதை டென்னிஸ் விளையாட்டுக்கு அரசு ஆதரவு அளிக்கவில்லை என்று கருதக் கூடாது என அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. 2026-27 நிதியாண்டிற்கான டென்னிஸ் விளையாட்டுக்கான வருடாந்திர பயிற்சி மற்றும் போட்டி பட்ஜெட்டாக (ஏசிடிசி) ₹10.05 கோடியை அரசு அனுமதித்துள்ளது.

இதில் இந்தியாவில் சர்வதேச போட்டிகளை நடத்த ₹3.91 கோடியும், வெளிநாட்டுப் பயிற்சிகள் மற்றும் சுற்றுப்பயணங்களுக்கு ₹2.14 கோடியும், ஜூனியர் மேம்பாட்டிற்கு ₹2 கோடியும், பயிற்சியாளர்கள் பயிற்சிக்கு ₹1 கோடியும், உயர்தர இயக்குநருக்கு ₹70 லட்சமும் மற்றும் மாற்றுத்திறனாளி டென்னிஸ் மேம்பாட்டிற்கு ₹30 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி வீரர்கள் தங்களது தரவரிசையை உயர்த்தி, வெளிநாடுகளில் விளையாடி தங்களது ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சர்ச்சை, ஆசிய விளையாட்டுப் போட்டி என்பது வெறும் வாய்ப்புக்கானதா அல்லது பதக்கங்களை வெல்வதற்கானதா என்ற பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது. வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் திறமையை சோதிக்க வேண்டும் என்று ஏஐடிஏ மற்றும் போபண்ணா போன்ற வீரர்கள் விரும்புகின்றனர். ஆனால், தரவுகளின் அடிப்படையில் பதக்கங்களை வெல்லக்கூடிய மிகச் சிறந்த வீரர்களை மட்டுமே அனுப்ப வேண்டும் என்பதில் விளையாட்டு அமைச்சகம் உறுதியாக உள்ளது.

'பயப்படாதீங்க பிரதர்.. நீங்கதான் கேப்டன்'.. தனஞ்செயாவை ஸ்லெட்ஜிங் செய்து அலறவிட்ட சர்ஃபராஸ் கான்

'பயப்படாதீங்க பிரதர்.. நீங்கதான் கேப்டன்'.. தனஞ்செயாவை ஸ்லெட்ஜிங் செய்து அலறவிட்ட சர்ஃபராஸ் கான்

இந்த தேர்வு முறை தற்போதைய ஆசிய விளையாட்டுப் போட்டியில் சில வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், இந்திய விளையாட்டுத் துறையின் தரத்தை உயர்த்துவதற்கும், எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை வலுவான சக்தியாக மாற்றுவதற்கும் இதுவே சரியான வழி என்று விளையாட்டு அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது.

Story first published: Tuesday, August 25, 2026, 22:17 [IST]
Other articles published on Aug 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+