உலகின் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தி 2025 ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார் மேடிசன் கீஸ்
மெல்போர்ன்: 2025 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான அரினா சபலென்காவை வீழ்த்தி முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
கடந்த இரண்டு முறையும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை அரினா சபலென்கா வென்று இருந்தார். அவரது ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து இருக்கிறார் மேடிசன் கீஸ். இந்த இறுதிப் போட்டியில் 6 - 3, 2 - 6 மற்றும் 7 - 5 என்ற செட் கணக்கில் அரினா சபலென்காவை, மேடிசன் கீஸ் வீழ்த்தினார்.

இந்த இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பின் ஏமாற்றத்தில் இருந்த அரினா சபலென்கா தனது டென்னிஸ் ராக்கெட்டை தரையில் அடித்து உடைத்தார். மேலும், தனது பயிற்சியாளர்களை பார்த்து, "இது எல்லாமே உங்களது தவறுதான். அடுத்த ஒரு வாரத்துக்கு உங்களை நான் பார்க்க விரும்பவில்லை. உங்களை வெறுக்கிறேன்." என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு வெளியேறினார்.
மேடிசன் கீஸ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பையை வென்ற நிலையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். மேடிசன் கீஸ் அமெரிக்காவை சேர்ந்தவர் என்ற நிலையில் குறிப்பிட்ட ஒரு புள்ளி விவரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நூற்றாண்டில் எப்போதெல்லாம் அமெரிக்காவில் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டு பதவி எற்கிறாரோ அப்போதெல்லாம் ஒரு அமெரிக்க வீராங்கனை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று இருக்கிறார் என்பது தான் அந்த புள்ளி விவரம்.
2009இல் பராக் ஒபாமா பதவி ஏற்ற போதும், 2017 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற போது செரினா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். அடுத்து ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற போது ஆஸ்திரேலிய ஓபன் தொடர் நடைபெறவில்லை. அதன் பின்னர் 2025 ஆம் ஆண்டு மீண்டும் டிரம்ப் அதிபராக பதவியேற்று இருக்கும் நிலையில் அமெரிக்கரான மேடிசன் கீஸ் ஆஸ்திரேலிய ஓபனை வென்று இருக்கிறார்.


Click it and Unblock the Notifications