மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கால் இறுதி சுற்றில் உலகின் இரண்டாவது நிலை வீரரான ஸ்பெயினில் கார்லஸ் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். நடபாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஒபனில் ஜோகோவிச்சை யார் தடுத்து நிறுத்தப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜோகோவிச் வழக்கம்போல் அரை இறுதி சுற்றுக்கு மிக எளிதாக தகுதி பெற்றுள்ள நிலையில் அவருக்கு போட்டியாக இருக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. ஜோகோவிச்சுக்கு ஸ்பெயினில் கார்லஸ் அல்காரஸ் கடும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் மெல்போர்னில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி சுற்றில் அல்காரஸ் உலகின் ஆறாவது நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொண்டார்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6க்கு1,6க்கு3, 6க்கு 7,6க்கு 4 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவ் வெற்றி பெற்றுள்ளார்.

திறமை வாய்ந்த வீரராக அலெக்சாண்டர் ஸ்வெரேவ் கருதப்பட்டாலும் இதுவரை அவர் ஒரு முறை கூட கிராண்ட் ஸ்லாம் தொடரை கைப்பற்றியதில்லை. தற்போது இரண்டாவது அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் ரஷ்ய வீரர் டேனில் மேட்வெடேவும் மோத உள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ், கடந்த ஒரு ஆண்டு முழுவதும் மெட்வடேவ், என்னைத் தொடர்ந்து வீழ்த்தி வந்தார்.

ஒருவேளை அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி மெல்போர்னில் நடக்கும் என நான் நினைக்கிறேன். வரும் அரை இறுதியில் உலகின் தலைசிறந்த வீரர் ஒருவரை நான் எதிர்கொள்ளப் போகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அவர் 2 கிராம்ஸ் எல்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார். மூன்றாவது செட் விளையாடிக் கொண்டிருக்கும் போது நான் வெற்றியை மட்டும்தான் யோசித்தேன். நாம் எல்லாம் மனிதர்கள் தானே. ஆனால் அல்காரஸ் போன்ற வீரர் விளையாடும்போது நிச்சியம் நாம் வெற்றியைப் பற்றி உடனே யோசிக்க கூடாது.

ஏனென்றால் நமது மூளை வெற்றியைப் பற்றி யோசிக்கும் போது நம்மால் சரியாக விளையாட முடியாது. ஆனால் நான்காவது செட்டில் நான் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன் என்று அலெக்சாண்டர் கூறியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆஸி. ஓபன் அரை இறுதி வரை சென்று தோல்வியை தழுவினார். இதுவரை அவர் ஒருமுறை மட்டும் தான் இறுதி சுற்றுக்கு சென்று இருக்கிறார். அதிலும் அவர் டோமினிக் தீமிடம் தோல்வியை தழுவி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.