மெல்போர்ன்: மெல்போர்னில் நடைபெற்று வரும் 2026 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், வெயிலின் தாக்கம் எல்லை மீறியதால் சனிக்கிழமையன்று போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 40 டிகிரி செல்சியஸை நெருங்கிய வெப்பத்தால் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 7வது நாளான இன்று (சனிக்கிழமை), மெல்போர்ன் நகரில் வெயில் கொளுத்தியது. பிற்பகல் நேரத்திலேயே வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை தாண்டியது. மாலையில் இது 40 டிகிரியை எட்டும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. இதன் காரணமாக, திறந்தவெளி மைதானங்களில் நடைபெற்று வந்த அனைத்து போட்டிகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாக போட்டி நிர்வாகிகள் அறிவித்தனர்.

முக்கிய மைதானமான ராட் லேவர் அரங்கில், நடப்பு சாம்பியன் ஜானிக் சின்னர் மற்றும் அமெரிக்க வீரர் எலியட் ஸ்பிசிரி இடையிலான போட்டி நடைபெற்று வந்தது. வெயிலின் உக்கிரம் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்த போட்டியும் சுமார் 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. மைதானத்தின் மேற்கூரை முழுமையாக மூடப்பட்ட பின்னரே ஆட்டம் மீண்டும் தொடங்கியது. மேற்கூரை வசதி கொண்ட மைதானங்களில் மட்டுமே போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திறந்தவெளி அரங்குகளில் நடக்கும் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் வீரர்களின் நலன் கருதி வெப்பத் தகுதி நிலை (Heat Stress Scale) என்ற அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. இது 1 முதல் 5 வரை கணக்கிடப்படும். காற்றின் வேகம், ஈரப்பதம், வெயில் மற்றும் வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றை வைத்து இது தீர்மானிக்கப்படும். இந்த அளவு 4 புள்ளிகளை எட்டினால், செட்களுக்கு இடையே வீரர்கள் அதிக நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இன்று மதியமே இந்த அளவு உச்சபட்சமான 5 புள்ளிகளை எட்டியது. விதிமுறைப்படி, 5ஐ தொட்டால் திறந்தவெளி மைதான போட்டிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். முக்கிய மைதானங்களில் மேற்கூரைகள் மூடப்பட வேண்டும்.
வெயில் உச்சத்தை தொடுவதற்கு முன்பே அமெரிக்க வீராங்கனைகள் மேடிசன் கீஸ் மற்றும் ஜெசிகா பெகுலா ஆகியோர் தங்கள் போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டனர். செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்திய மேடிசன் கீஸ் பேசுகையில், "நான் புளோரிடாவில் இருந்து வருகிறேன். அங்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், இந்தச் சூழல் எனக்குப் புதிதல்ல. சொல்லப்போனால் இந்த வெயிலைப் பார்த்து நான் உற்சாகமடைந்தேன்" என்று கூறினார். ஜெசிகா பெகுலாவும் தனது ஆட்டத்தை விரைவாக முடித்துக்கொண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மைதானத்திற்கு வந்திருந்த ரசிகர்கள் வெயிலின் தாக்கம் தாங்காமல் தலையில் துண்டுகளைப் போர்த்திக் கொண்டும், சன்ஸ்கிரீன் பூசிக்கொண்டும் காணப்பட்டனர். நிர்வாகம் தரப்பில் ரசிகர்களுக்குத் தண்ணீர் அதிகம் குடிக்குமாறும், தொப்பி அணிந்து வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், உண்மையான டென்னிஸ் ரசிகர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் உற்சாகமாக மைதானத்தில் காத்திருக்கின்றனர். "வெயில் கொடுமையாகத் தான் இருக்கிறது. ஆனால் வீரர்கள் இதற்கெல்லாம் பழகியிருப்பார்கள். நாங்கள் எதற்கும் தயாராகத் தான் வந்துள்ளோம்" என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.