ஆஸ்திரேலிய ஓபன் தொடர் : கலப்பு இரட்டையர் பிரிவில் போபன்னா இணை தோல்வி
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதியில் போட்டியிட்ட இந்திய வீரர் ரோஹன் போபன்னா மற்றும் உக்ரைனை சேர்ந்த நதியா கிச்செனோக் இணை 0க்கு 6 மற்றும் 2க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் கடந்த 20ம் தேதி துவங்கி வரும் 2ம் தேதி வரை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இதில் இந்திய வீரர் போபன்னா -கிச்செனோக் இணை காலிறுதி வரை முன்னேறியது. காட்டுத் தீயையும் எதிர்கொண்டு நடைபெற்றுவரும் இந்த தொடரில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இருதினங்களுக்கு முன்பு கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் தோற்ற நிலையில் தற்போது ரோஹன் போபன்னா தோற்று இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சர்வதேச வீரர்கள் பங்கேற்பு
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் காட்டுத்தீயையும் எதிர்கொண்டு நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சாம்பியன்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான இது கடந்த 20ம் தேதி துவங்கி வரும் 2ம் தேதிவரை நடைபெறவுள்ளது.

காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வி
இந்த தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபன்னா மற்றும் உக்ரைனை சேர்ந்த நதியா கிச்செனோக் இணை காலிறுதி வரை முன்னேறியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ரோஹன் -நதியா இணை அதிர்ச்சி தோல்வி கண்டுள்ளது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட குரோஷியன் -செக் நாட்டின் வீரர்களிடம் போபன்னா ஜோடி தோல்வி அடைந்துள்ளது.

5வது இடத்தின் வீரர்களிடம் தோல்வி
இன்று நடைபெற்ற இந்த கலப்பு இரட்டையர் போட்டியில் ஆரம்பம் முதலே ஐந்தாவது இடத்தில் உள்ள குரோஷியன் -செக் நாட்டு வீரர்கள் நிகோலா மெக்டிக் மற்றும் பார்போரா கிரெஜிகோவா இணை முன்னிலையில் இருந்தனர். இரண்டாவது செட்டில் போபன்னா இணை சமாளித்து ஆட முற்பட்ட நிலையில், அவர்களை முன்னேற விடாமல் நிகோலா மற்றும் பார்போரா இணை தடுத்து அரையிறுதிக்கு முன்னேறியது.

லியாண்டர் பயஸ் தோல்வி
இதேபோல லாட்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடிய இந்தியாவின் லியாண்டர் பயஸ், கடந்த செவ்வாயன்று தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். இவர் 6க்கு 2 மற்றும் 7க்கு 5 என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறினார். இந்த இருவரின் தோல்வியின்மூலம் இந்தியாவின் பதக்கக் கனவு முடிவுக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications